எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:10-14

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:10-14 TAERV

இங்கு நடந்த அனைத்தையும் யூதாவை ஆள்பவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் ராஜாவின் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் புதிய வாயிலின் முகப்பில் தங்கள் இடத்தில் அமர்ந்தனர். புதிய வாசல் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வழிநடத்தும் வாசல். பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஆள்வோர்களிடமும் ஜனங்களிடமும் பேசினார்கள். அவர்கள், “எரேமியா கொல்லப்படவேண்டும். அவன் எருசலேமைப்பற்றி கெட்டவற்றைக் கூறினான். அவன் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்” என்றனர். பிறகு எரேமியா, யூதாவின் ஆள்வோர்களிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினான். அவன், சொன்னான், “இவ்வாலயம் மற்றும் நகரைப்பற்றி இவற்றைச் சொல்ல என்னை கர்த்தர் அனுப்பினார். நீங்கள் கேட்ட அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தது. ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்! நல்லவற்றைச் செய்யத் தொடங்குங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் தமது மனதை மாற்றுவார். உங்களுக்குச் சொன்ன தீயச் செயல்களை கர்த்தர் செய்யமாட்டார். என்னைப் பொறுத்தவரை, நான் உங்கள் அதிகாரத்தில் இருக்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தோன்றினபடி நல்லது என்று எதை எண்ணுகிறீர்களோ அதை எனக்குச் செய்யுங்கள்.