ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 59:12-20

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 59:12-20 TAERV

ஏனென்றால், நாம் நமது தேவனுக்கு எதிராகப் பல தீமைகளைச் செய்திருக்கிறோம். நாம் தவறானவர்கள் என்பதை நமது பாவங்கள் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் செய்த குற்றவாளிகள் என்பதை நாம் அறிவோம். நாம் பாவங்கள் செய்து கர்த்தருக்கு எதிராகத் திரும்பினோம். நாம் அவரை விட்டுத் திரும்பி அவரை விட்டு விலகினோம். நாம் தீயவற்றுக்குத் திட்டமிட்டோம். தேவனுக்கு எதிராக இருக்கும் செயல்களுக்குத் திட்டமிட்டோம். நம்மிடம் இவற்றைப் பற்றிய எண்ணங்கள் உண்டு. நமது இதயத்தில் இவற்றைப்பற்றி திட்டமிட்டோம். நம்மிடமிருந்து நீதி திரும்பிவிட்டது. நேர்மையானது வெகு தொலைவில் உள்ளது. உண்மையானது தெருக்களில் விழுந்து கிடக்கின்றது. நன்மையானது நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. உண்மை போய்விட்டது. நன்மை செய்யவேண்டும் என்று முயற்சி செய்கிறவர்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். கர்த்தர் பார்த்தார். அவரால் எந்த நன்மையும் கண்டுகொள்ள முடியவில்லை. கர்த்தர் இதனை விரும்பவில்லை. கர்த்தர் பார்த்து ஆச்சரியப்பட்டார். ஜனங்களுக்கு உதவி செய்ய ஒருவனும் நிற்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, கர்த்தர் தனது சொந்த வல்லமயையும் நீதியையும் பயன்படுத்தினார். கர்த்தர் ஜனங்களைக் காப்பாற்றினார். கர்த்தர் போருக்குத் தயார் செய்தார். கர்த்தர் நீதியை மார்புக் கவசமாக்கினார். இரட்சிப்பைத் தலைக்குச் சீராவாக்கினார். தண்டனைகள் என்னும் ஆடைகளை அணிந்துகொண்டார். உறுதியான அன்பைச் சால்வையாகப்போர்த்தினார். கர்த்தர் தனது பகைவர்கள்மீது கோபம் கொண்டிருக்கிறார். எனவே, கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார். கர்த்தர் தனது பகைவர்கள் மீது கோபம்கொண்டிருக்கிறார். எனவே, தொலைதூர இடங்களிலுள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டிப்பார். கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார். எனவே, மேற்கே உள்ள ஜனங்கள் அஞ்சி, கர்த்தருடைய நாமத்திற்கு மரியாதை தருவார்கள். கிழக்கே உள்ள ஜனங்கள் அஞ்சி, கர்த்தருடைய மகிமைக்கு மரியாதை தருவார்கள். கர்த்தர் விரைவில் வருவார். கர்த்தர் வேகமாகப் பாயும் ஆறு பலமான காற்றால் அடித்து வருவதுபோல் விரைந்து வருவார். பிறகு, ஒரு மீட்பர் சீயோனுக்கு வருவார். அவர் பாவம் செய்து பிறகு தேவனிடம் திரும்பிய யாக்கோபின் ஜனங்களிடம் வருவார்.