அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்:
கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார்.
நமக்குப் பலமான நகரம் உள்ளது.
நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன.
கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள்.
தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.
கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும்,
உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள்.
ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார்.
அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார்.
கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார்.
அது புழுதிக்குள் விழும்.
பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.
நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை.
நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள்.
தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி
எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.
ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம்.
எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.
இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது.
என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது.
தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது,
ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்.
தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான்.
அவனிடம் நீர் இரக்கம் மட்டும் காட்டினால், அவன் கெட்டவற்றை மட்டும் செய்வான்.
அவன் நல்லவர்களின் உலகில் வாழ்ந்தாலும் கூட,
கர்த்தருடைய மகத்துவத்தை தீயவன் எப்பொழுதும் கண்டுகொள்ளமாட்டான்.
ஆனால் கர்த்தாவே, நீர் அந்த ஜனங்களைத் தண்டித்தால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
கர்த்தாவே, தீயவர்களிடம் உமது ஜனங்கள்மேல் நீர் வைத்திருக்கிற பலமான அன்பைக் காட்டும்.
உண்மையாகவே தீய ஜனங்கள் அவமானப்படுவார்கள்,
உமது எதிரிகள் அவர்களது சொந்த நெருப்பிலேயே (தீமை) எரிக்கப்படுவார்கள்.
கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர்.
ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்.
கர்த்தாவே, நீர் எங்களது தேவன்,
ஆனால் கடந்த காலத்தில், நாங்கள் மற்ற தெய்வங்களைப் பின்பற்றினோம்.
நாங்கள் மற்ற எஜமானர்களுக்கு உரியவர்களாய் இருந்தோம்,
ஆனால், இப்பொழுது நாங்கள் ஒரே ஒரு நாமத்தை, அதுவும் உமது நாமத்தை மட்டும் நினைவில் வைக்க விரும்புகிறோம்.