ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 24:16-23

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 24:16-23 TAERV

பூமியிலுள்ள ஒவ்வொரு இடத்திலிருந்தும் தேவனைத் துதிக்கும் பாடலைக் கேட்போம். இப்பாடல்கள் நல்ல தேவனைத் துதிக்கும். ஆனால், நான் சொல்கிறேன்: “போதும்! எனக்கு போதுமானது உள்ளது! நான் பார்க்கின்றவை பயங்கரமாக உள்ளன. துரோகிகள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்பி, அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.” அந்தத் தேசத்தில் வாழும் ஜனங்களுக்கு ஆபத்து வருவதைப் பார்க்கிறேன். அவர்களுக்கு அச்சம், குழிகள், உலைகள் இருப்பதைப் பார்க்கிறேன். ஜனங்கள் ஆபத்தைப்பற்றி கேள்விப்படுவார்கள். அவர்கள் அச்சப்படுவார்கள். சில ஜனங்கள் வெளியே ஓடுவார்கள். ஆனால், அவர்கள் குழிக்குள் விழுவார்கள்; வலைக்குள் அகப்படுவார்கள். சில ஜனங்கள் குழியிலிருந்து வெளியே ஏறி வருவார்கள். ஆனால், அவர்கள் இன்னொரு வலைக்குள் அகப்படுவார்கள். வானத்தில் உள்ள வெள்ளத்தின் கதவுகள் திறக்கும். வெள்ளம் பெருகத்தொடங்கும். பூமியின் அஸ்திபாரம் அசையும். நில நடுக்கம் ஏற்படும். பூமியானது பிளந்து திறந்துக்கொள்ளும். உலகத்தின் பாவங்கள் மிகவும் கனமானவை. எனவே, பாரத்திற்கு அடியில் பூமி விழுந்துவிடும். பழைய வீடுபோன்று பூமி நடுங்கும். குடிகாரனைப்போன்று பூமி விழுந்துவிடும். பூமியானது தொடர்ந்து இருக்கமுடியாமல் போகும். அந்த நேரத்தில், கர்த்தர் பரலோகத்தின் சேனைகளை பரலோகத்திலும், பூமியிலுள்ள ராஜாக்களைப் பூமியிலும் தீர்ப்பளிப்பார். பல ஜனங்கள் சேர்ந்து கூடிக்கொள்வார்கள். அவர்களில் சிலர் குழியில் அடைக்கப்படுவார்கள். அவர்களின் சிலர் சிறைக்குள் இருப்பார்கள். ஆனால் இறுதியில், நீண்ட நேரத்திற்குப் பிறகு, அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். எருசலேமில், சீயோன் மலைமேல் கர்த்தர், ராஜாவைப்போன்று ஆட்சிசெய்வார். அவரது மகிமையானது மூப்பர்களுக்கு முன் இருக்கும். அவரது மகிமையானது மிகவும் பிரகாசமாயிருப்பதால் சூரியன் நாணமடையும், சந்திரன் இக்கட்டான நிலையிலிருக்கும்.