எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:6-10

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:6-10 TAERV

சில இடத்தில் “தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்? மனிதகுமாரனைப் பற்றியும் ஏன் அக்கறை கொள்கிறீர்? அவர் அவ்வளவு முக்கியமானவரா? கொஞ்ச நேரத்திற்கு தேவ தூதர்களைவிட அவரைச் சிறியவர் ஆக்கிவிட்டீர். அவரை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டினீர். நீர் எல்லாவற்றையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தீர்” என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை. சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார். தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை ஏற்படுத்தினார். இயேசு தன் துன்பத்தால் ஒரு பூரண இரட்சகரானார்.