ஆதியாகமம் 6:9-22

ஆதியாகமம் 6:9-22 TAERV

இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான். அவனுக்கு சேம், காம், யாப்பேத் எனும் மூன்று குமாரர்கள் இருந்தனர். தேவன் பூமியைப் பார்த்தார். அது மனிதர்களால் கெடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். எங்கும் வன்முறை பரவியிருந்தது. ஜனங்கள் பாவிகளாகவும், கொடூரமானவர்களாகவும் மாறியிருந்தனர். அவர்கள் பூமியில் தம் வாழ்க்கையையும் கெடுத்திருந்தனர். எனவே, தேவன் நோவாவிடம், “எல்லோரும் பூமியில் பாவத்தையும் வன்முறையையும் பரவ வைத்துள்ளனர். எனவே நான் எல்லா உயிர்களையும் அழித்து, அவற்றை பூமியிலிருந்து விலக்குவேன். கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி நீயே ஒரு பெரிய கப்பலைச் செய். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி விடு. “கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் இருக்கட்டும். இதில் 18 அங்குலம் கூரையை விட்டு கீழே ஒரு ஜன்னல் இருக்கட்டும். கப்பலின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும். அதில் மேல்தளம், நடுத்தளம், கீழ்த்தளம் என்று மூன்று தளங்கள் இருக்கட்டும். “நான் உனக்குச் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவேன். வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். மண்ணிலுள்ள அனைத்தும் மரணமடையும். ஆனால் நான் உன்னோடு ஒரு சிறப்பான உடன்படிக்கையைச் செய்கிறேன். நீயும் உன் மனைவியும் உன் குமாரர்களும், குமாரர்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவைகள் உயிரோடு இருக்கட்டும். ஒவ்வொரு பறவை இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு மிருக இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், எல்லா ஊர்வனவற்றிலும் ஒவ்வொரு ஜோடியும் கண்டு பிடித்து, அவற்றையும் உனது கப்பலில் உயிரோடு வைத்துக்கொள். எல்லாவகை உணவுப் பொருட்களையும் கப்பலில் சேமித்து வை. அவ்வுணவு உங்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் உதவியாக இருக்கட்டும்” என்றார். நோவா தேவன் சொன்னபடி எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஆதியாகமம் 6:9-22