ஆதியாகமம் 50:14-21

ஆதியாகமம் 50:14-21 TAERV

யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பிறகு, அவனோடு அனைவரும் எகிப்துக்குத் திரும்பிப் போனார்கள். யாக்கோபு மரித்தபிறகு யோசேப்பின் சகோதரர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்கள் பயந்தார்கள். அவர்கள் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீமையை எண்ணிப் பயந்தனர். “நாம் யோசேப்பிற்குச் செய்த தீமைக்காக அவன் இப்போது நம்மை வெறுக்கலாம். நம் தீமைகளுக்கெல்லாம் அவன் பழி தீர்க்கலாம்” என்று அவர்கள் பேசிக்கொண்டனர். எனவே அவனது சகோதரர்கள் அவனுக்குக் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினர்: “தந்தை மரிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு செய்தி சொல்லும்படி சொன்னார். அவர், ‘யோசேப்புக்கு நீங்கள் முன்பு செய்த தீமையை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றார். எனவே நாங்கள் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உனக்குச் செய்த தீமைக்கு எங்களை மன்னித்துவிடு. நாங்கள் தேவனின் அடிமைகள். அவர் உனது தந்தைக்கும் தேவன்” என்றனர். இந்தச் செய்தி யோசேப்பை மிகவும் துக்கப்படுத்தியது. அவன் அழுதான். அவனது சகோதரர்கள் அவனிடம் சென்று பணிந்து வணங்கினார்கள். “நாங்கள் உன் வேலைக்காரர்கள்” என்றனர். பிறகு யோசேப்பு, “பயப்படவேண்டாம், நான் தேவன் அல்ல. உங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை. எனக்குக் கேடு செய்ய நீங்கள் திட்டம்போட்டீர்கள் என்பது உண்மை. ஆனால் உண்மையில் தேவன் நன்மைக்குத் திட்டமிட்டிருக்கிறார். நான் பலரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது தேவனின் திட்டம். இன்னும் அவரது திட்டம் அதுதான். எனவே அஞ்ச வேண்டாம். நான் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக்கொள்வேன்” என்றான். இவ்வாறு யோசேப்பு தன் சகோதரர்களுக்கு இனிமையாகப் பதில் சொன்னான். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.