ஆதியாகமம் 48:14-22

ஆதியாகமம் 48:14-22 TAERV

ஆனால் இஸ்ரவேல் தனது கைகளைக் குறுக்காக வைத்து வலது கையை இளையவன் மீதும் இடது கையை மூத்தவன் மீதும் வைத்து ஆசீர்வாதம் செய்தான். மனாசே மூத்தவனாக இருப்பினும் அவன் மீது இடது கையை வைத்து ஆசீர்வதித்தான். இஸ்ரவேல் யோசேப்பையும் ஆசீர்வதித்தான். அவன், “என் முற்பிதாக்களான ஆபிரகாமும் ஈசாக்கும் நம் தேவனை வழிபட்டனர். அதே தேவன் என் வாழ்க்கை முழுவதும் என்னை வழி நடத்தினார். எனது அனைத்து துன்பங்களிலும் என்னைக் காப்பாற்றும் தேவதூதனாக இருந்தார். இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி அந்த தேவனை வேண்டுகிறேன். இப்போது இவர்கள் எனது பெயரையும், எனது முற்பிதாக்களான ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் பெயரையும் பெறுவார்கள். இவர்கள் வளர்ந்து மகத்தான குடும்பமாகவும், தேசமாகவும் இப்பூமியில் விளங்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றான். யோசேப்பு தன் தந்தை வலது கையை எப்பிராயீம் மீது வைத்திருப்பதைப் பார்த்தான். இது யோசேப்புக்கு மகிழ்ச்சி தரவில்லை. யோசேப்பு தன் தந்தையின் வலது கையை எப்பிராயீம் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்க விரும்பினான். அவன் தன் தந்தையிடம், “உமது வலது கையைத் தவறாக வைத்திருக்கிறீர், மனாசேதான் முதல் குமாரன்” என்றான். ஆனால் யாக்கோபோ, “எனக்குத் தெரியும் மகனே! மனாசேதான் மூத்தவன், அவன் பெரியவன் ஆவான். அவனும் ஏராளமான ஜனங்களின் தந்தையாவான். ஆனால் இளையவனே மூத்தவனைவிட பெரியவனாவான். அவனது குடும்பமும் மிகப் பெரியதாக இருக்கும்” என்றான். இவ்விதமாக இஸ்ரவேல் அன்று அவர்களை ஆசீர்வதித்தான். “இஸ்ரவேலின் ஜனங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி மற்றவரை வாழ்த்துவார்கள். அவர்கள், ‘எப்பிராயீமும் மனாசேயும்போல தேவன் உங்களை வாழ வைக்கட்டும் என்பார்கள்’” என்றான். இவ்வாறு இஸ்ரவேல் எப்பீராயிமை மனாசேயைவிடப் பெரியவனாக்கினான். பிறகு இஸ்ரவேல் யோசேப்பிடம், “பார், நான் மரிப்பதற்குரிய காலம் நெருங்கிவிட்டது. ஆனாலும் தேவன் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை உன் முற்பிதாக்களின் பூமிக்கு வழி நடத்திச் செல்வார். நான் உன் சகோதரர்களுக்குக் கொடுக்காத சிலவற்றை உனக்குக் கொடுத்திருக்கிறேன். எமோரிய ஜனங்களிடம் இருந்து நான் வென்ற மலையை உனக்குக் கொடுத்திருக்கிறேன். நான் என் பட்டயத்தையும், வில்லையும் பயன்படுத்தி அதை நான் வென்றேன்” என்றான்.