ஆதியாகமம் 42:25-38

ஆதியாகமம் 42:25-38 TAERV

யோசேப்பு வேலைக்காரர்களிடம் அவர்களின் பைகளை உணவுப் பொருட்களால் நிரப்பிய பின்னர் அவர்கள் கொடுத்த பணத்தை அவர்கள் பையிலேயே போட்டு, அவர்களின் பயணத்துக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுத்து அனுப்பச் சொன்னான். சகோதரர்கள் உணவுப் பொருட்களைக் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு போனார்கள். அன்று இரவு வழியில் ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது ஒருவன் கழுதைக்காக உணவு எடுக்கப் பையைத் திறந்து பார்த்தபோது உள்ளே பணம் இருந்தது. அவன் மற்ற சகோதரர்களிடம், “பாருங்கள். இங்கே பணம் இருக்கிறது. நான் தானியத்துக்குப் பணம் கொடுத்தேன். ஆனால் பணம் என் பையில் திரும்பப் போடப்பட்டிருக்கிறது” என்றான். அவர்கள் பயந்தார்கள், “தேவன் நமக்கு என்ன செய்கிறார்?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர். அவர்கள் கானான் பகுதிக்குப் போய் தம் தந்தையான யாக்கோபைச் சந்தித்து, நடந்தவை அனைத்தையும் சொன்னார்கள். “அந்நாட்டின் ஆளுநர் எங்களிடம் மிகக் கடுமையாகப் பேசினான். எங்களை ஒற்றர்கள் என்று குற்றம் சாட்டினான்” நாங்கள் அவ்வாறு இல்லை என்று மறுத்தோம். நாங்கள் நேர்மையானவர்கள் என்றோம். நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள் என்றும் தந்தையைப்பற்றியும் இளைய தம்பியைப்பற்றியும் சொன்னோம். “பிறகு அந்த ஆளுநர் ‘நீங்கள் கௌரவமானவர்கள் என்பதை இதன் மூலம் நிரூபியுங்கள். ஒரு சகோதரனை விட்டு விட்டுப் போங்கள். உங்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். பிறகு உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் கௌரமானவர்களா, இல்லை ஒற்றர்களா என்பதை அறிந்துகொள்வேன். நீங்கள் சொன்னது உண்மை என்றால் உங்கள் சகோதரனை விட்டு விடுவோம். நீங்களும் இந்த தேசத்திலே வியாபாரம் பண்ணலாம், என்று சொன்னான்’” என்றார்கள். பிறகு சகோதர்கள் அனைவரும் தங்கள் பைகளை அவிழ்த்து தானியத்தை வெளியே எடுத்தனர். எல்லாப் பைகளிலும் பணம் இருந்தது. சகோதரர்களும் தந்தையும் அவற்றைப் பார்த்து அஞ்சினார்கள். யாக்கோபு அவர்களிடம், “நான் எனது எல்லா குமாரர்களையும் இழக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? யோசேப்பு போய்விட்டான். சிமியோனும் போய்விட்டான். நீங்கள் இப்போது பென்யமீனையும் கொண்டுபோகிறீர்களா?” என்று கேட்டான். அதற்கு ரூபன், “தந்தையே, நான் பென்யமீனை மீண்டும் உங்களிடம் அழைத்து வராவிட்டால் எனது இரண்டு குமாரர்களையும் கொன்றுவிடுங்கள். என்னை நம்புங்கள். நான் பென்யமீனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வருவேன்” என்றான். ஆனால் யாக்கோபு, “பென்யமீனை உங்களோடு அனுப்பமாட்டேன். அவனது ஒரே சகோதரன் மரித்துபோனான். ராகேலின் குமாரர்களில் இவன் ஒருவன் மட்டுமே உள்ளான். எகிப்துக்கு போகிற வழியில் ஏதாவது நடந்தால் அதுவே என்னைக் கொன்றுவிடும். வயதான என்னை துக்கத்துடனே கல்லறைக்கு அனுப்புவீர்கள்” என்றான்.