ஆதியாகமம் 32:22-30

ஆதியாகமம் 32:22-30 TAERV

பின்னிரவில் எழுந்து அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். அவன் தனது இரண்டு மனைவிகளையும், இரண்டு வேலைக்காரிகளையும், பதினொரு குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்தான். முதலில் தன் குடும்பத்தை ஆற்றைக் கடக்க அனுப்பினான். பிறகு தனக்குரிய அனைத்தும் கடக்க உதவினான். யாக்கோபு ஆற்றைக் கடந்தவர்களில் கடைசி நபர். அவன் ஆற்றைக் கடக்குமுன், தனியாக நிற்கும்போது தேவதூதனைப் போன்ற ஒருவர் வந்து அவனோடு போராடினார். சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் போராடியும், அந்த மனிதரை யாக்கோபு விடுவதாயில்லை. எனவே, அவர் யாக்கோபின் தொடையைத் தொட்டார். அப்போது யாக்கோபின் கால் சுளுக்கிக்கொண்டது. அந்த மனிதர் யாக்கோபிடம், “என்னைப் போக விடுகிறாயா? சூரியன் உதித்துவிட்டது” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “நான் உம்மைப் போகவிடமாட்டேன். நீர் என்னை ஆசீர்வதித்தே ஆக வேண்டும்” என்றான். அந்த மனிதர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அவன், “என் பெயர் யாக்கோபு” என்றான். பிறகு அந்த மனிதர், “உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. உன் பெயர் இஸ்ரவேல். நீ தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டபடியால் நான் உனக்கு இந்தப் பெயரை வைக்கிறேன். உன்னைத் தோற்கடிக்க மனிதர்களால் முடியாது” என்றார். யாக்கோபு அவரிடம், “உமது பெயரைத் தயவு செய்து சொல்லும்” என்றான். ஆனால் அவர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். அதே சமயத்தில் அவர் யாக்கோபை ஆசீர்வதித்தார். எனவே, யாக்கோபு அந்த இடத்திற்கு பெனியேல் என்று பெயர் வைத்தான். “இந்த இடத்தில் நான் தேவனை முகமுகமாய்ப் பார்த்தேன். உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்றான்.