ஆதியாகமம் 1:19-31

ஆதியாகமம் 1:19-31 TAERV

மாலையும் காலையும் ஏற்பட்டது. இது நான்காம் நாள். பிறகு தேவன், “தண்ணீரானது திரளான உயிரினங்களை தோற்றுவிப்பதாக, பூமியிலும் வானத்திலும் பறப்பதற்காக பறவைகள் உருவாகட்டும்” என்றார். பிறகு தேவன் கடலில் வாழும் பெரிய உயிரினங்களை உருவாக்கினார். கடலுக்குள் அலைந்து திரிகிற ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். பல்வேறு வகையான கடல் வாழ் உயிர்களையும் படைத்தார். வானத்தில் பறந்து திரிகிறதற்கு பல்வேறுவகைப் பறவைகளையும் படைத்தார். தேவன் இது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று. பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது. இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங்களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார். அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார். எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள். கடலில் உள்ள மீன்களையும் வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளுங்கள். பூமியில் அலைந்து திரிகின்ற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்றார். மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும். நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.