கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 2:11-19

கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 2:11-19 TAERV

அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன். அந்தியோகியாவுக்கு அவர் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு அவர் சேர்ந்தார். அவர்களோடு உணவு உட்கொண்டார். ஆனால் யாக்கோபிடமிருந்து அனுப்பியிருந்த சில யூதர்கள் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு சேர்ந்து உணவு உண்ணப் பேதுரு மறுத்துவிட்டார். அவர்களிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் யூதர்களுக்குப் பயந்துவிட்டார். ஏனென்றால் யூதர்கள், யூதர் அல்லாதவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நம்புகின்றவர்கள். ஆகையால் பேதுரு பொய் முகக்காரராக இருந்தார். ஏனைய யூதர்களும் அவரோடு சேர்ந்துகொண்டனர். எனவே அவர்களும் பொய்முகக்காரர்கள். இதனால் பர்னபாவும் பாதிக்கப்பட்டான். யூதர்கள் செய்வதை நான் பார்த்தேன். அவர்கள் நற்செய்தியின் முழு உண்மையைப் பின்பற்றவில்லை. எனவே எல்லாரும் கேட்கும்படியே நேரடியாய்ப் பேதுருவிடம் சென்று நான் கண்டித்தேன். “பேதுரு நீங்கள் ஒரு யூதர். ஆனால் நீங்கள் ஒரு யூதரைப்போல வாழவில்லை. நீங்கள் யூதர் அல்லாதவரைப்போல வாழ்கிறீர்கள். இவ்வாறு இருக்க நீங்கள் எப்படி யூதர் அல்லாதவர்களை யூதர்கள்போல வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்?” என்று கேட்டேன். யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம். சட்டங்களின் விதி முறைகளை ஒருவன் பின்பற்றுவதினாலேயே தேவனுக்கு வேண்டியவனாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவின் மீது எவன் நம்பிக்கை வைக்கிறானோ அவனே தேவனுக்கு வேண்டியவனாகிறான். எனவே, நாம் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஏனென்றால் நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். நாம் சட்டங்களைப் பின்பற்றுவதால் அல்ல, இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதாலேயே தேவனுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம். இது உண்மை. ஏனென்றால் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் எவரொருவரும் தேவனுக்கு வேண்டியவராக முடியாது. யூதர்களாகிய நாம் கிறிஸ்துவிடம் வந்துள்ளோம். காரணம், நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். எனவே, நாம் பாவிகள் என்பது தெளிவாகிறது. இதற்குக் கிறிஸ்து காரணம் ஆவாரா? இல்லை. ஆனால், நான் விட்டுவிட்டவற்றை மீண்டும் போதிக்கத் தொடங்கினால் நானும் தவறானவன் என்று கருதப்படுவேன். சட்டங்களுக்காக வாழ்வது என்பதை நான் விட்டுவிட்டேன். அச்சட்டங்களோ என்னைக் கொன்றுவிட்டது. நான் விதிமுறையின்படி இறந்து போனேன். எனினும் தேவனுக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது கடந்தகால வாழ்வு கிறிஸ்துவோடு சிலுவையில் இறந்தது.