எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 37:1-14

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 37:1-14 TAERV

கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. கர்த்தருடைய ஆவி என்னை நகரத்திலிருந்து தூக்கி ஒரு பள்ளத்தாக்கின் நடுவிலே கொண்டுபோய்விட்டது. அப்பள்ளத்தாக்கு மரித்துப்போன மனிதர்களின் எலும்புகளால் நிறைந்திருந்தது. பள்ளத்தாக்கின் வெட்ட வெளியில் அந்த எலும்புகள் மிகுதியாகக் கிடந்தன. என்னை அந்த எலும்புகள் நடுவே நடக்குமாறு கர்த்தர் செய்தார். நான் அவ்வெலும்புகள் மிகவும் காய்ந்து கிடந்ததைக் கண்டேன். பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கேட்டார்: “மனுபுத்திரனே, இந்த எலும்புகளுக்கு உயிர்வருமா?” நான் சொன்னேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உமக்கு மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “அவ்வெலும்புகளிடம் எனக்காகப் பேசு. அவ்வெலும்புகளிடம் சொல், ‘காய்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கவனியுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்! நான் உங்களில் தசைநார்களையும், தசைகளையும் வைப்பேன். நான் உங்களை தோலால் மூடுவேன். பின்னர், நான் உங்களுக்குள் மூச்சுக் காற்றை வைப்பேன். நீங்கள் திரும்ப உயிர் பெறுவீர்கள்! பிறகு, நானே கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.’” எனவே, நான் கர்த்தருக்காக எலும்புகளிடம் அவர் சொன்னது போல் பேசினேன். நான் இன்னும் பேசிக்கொண்டிருந்தபோது, உரத்த சத்தம் கேட்டது, எலும்புகள் அசைந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொண்டன. அங்கே என் கண் முன்னால் எலும்புகளின் மேல் தசைநார்களும், தசைகளும் சேர்ந்தன. அவற்றைத் தோல் மூடிக்கொண்டது. ஆனால் உடல்கள் அசையவில்லை. அவற்றில் மூச்சுக் காற்று இல்லை. பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “எனக்காகக் காற்றிடம் பேசு. மனுபுத்திரனே, எனக்காகக் காற்றிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று காற்றிடம் சொல்: ‘காற்றே, எல்லா திசைகளிலுமிருந்து வா, மரித்த உடல்களுக்குள் மூச்சுக் காற்றை ஊது! அவர்கள் மீண்டும் உயிர்பெறட்டும்!’” எனவே நான் கர்த்தருக்காகக் காற்றிடம் அவர் சொன்னதுபோன்று பேசினேன். மரித்த உடல்களுக்குள் ஆவி புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று எழுந்து நின்றார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகமிக அதிகமான பெருஞ்சேனையைப்போன்று நின்றார்கள்! பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “மனுபுத்திரனே, இவ்வெலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இஸ்ரவேல் ஜனங்கள் சொல்கிறார்கள்: ‘எங்கள் எலும்புகள் காய்ந்துவிட்டன. எங்கள் நம்பிக்கை போய்விட்டது. நாங்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறோம்!’ எனவே, எனக்காக அவர்களிடம் பேசு, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று சொல்: ‘என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டுவருவேன்! பின்னர் உங்களை நான் இஸ்ரவேல் நிலத்திற்குக் கொண்டு வருவேன். என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டு வருவேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களில் எனது ஆவியை வைப்பேன். நீங்கள் மீண்டும் உயிர் பெறுவீர்கள். பின்னர் நான் உங்களை உங்களது சொந்த நாட்டிற்கு வழிநடத்திச்செல்வேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நான் இவற்றைச் சொன்னேன் என்பதையும் இவை நடக்கும்படிச் செய்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.’” கர்த்தர் அவற்றைச் சொன்னார்.