யாத்திராகமம் 6:2-8

யாத்திராகமம் 6:2-8 TAERV

பின், தேவன் மோசேயை நோக்கி, “நானே கர்த்தர். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. நான் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவர்கள் அத்தேசத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த தேசமல்ல. இஸ்ரவேல் ஜனங்கள் படும் தொல்லைகளை நான் இப்போது அறிகிறேன். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதையும் நான் அறிகிறேன், எனது உடன்படிக்கையை நினைவுகூருகிறேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, ‘நானே கர்த்தர். நான் உங்களை மீட்பேன். நான் உங்களை விடுவிப்பேன். எகிப்தியர்களுக்கு நீங்கள் அடிமைகளாக இருக்கமாட்டீர்கள். எனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தி, எகிப்தியருக்குப் பயங்கரமான தண்டனை அளிப்பேன். பின், உங்களை மீட்பேன். நீங்கள் எனது ஜனங்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாக இருப்பேன். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டேன் என்பதை அறிவீர்கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஒரு பெரிய வாக்குத்தத்தம் பண்ணினேன். அவர்களுக்கு ஒரு விசேஷமான தேசத்தை அளிப்பதாக வாக்களித்தேன். எனவே உங்களை அத்தேசத்திற்கு வழிநடத்துவேன். உங்களுக்கு அத்தேசத்தைத் தருவேன், அது உங்களுடையதாக இருக்கும். நானே கர்த்தர்!’ என்று கூறியதாகச் சொல்லுங்கள்” என்றார்.