யாத்திராகமம் 3:13-21

யாத்திராகமம் 3:13-21 TAERV

அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான். அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார். மேலும் கர்த்தர், “போய் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒருமித்துக் கூடி வரச் செய்து அவர்களுக்கு, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யேகோவா, எனக்குத் தரிசனமளித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரின் தேவன் என்னிடம் பேசினார்.’ கர்த்தர், ‘நான் உங்களை நினைவுகூர்ந்து, எகிப்தில் உங்களுக்கு நடந்ததையும் கண்டேன். எகிப்தில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடிவு செய்தேன். இப்போது கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற வெவ்வேறு ஜனங்களுக்குச் சொந்தமான தேசத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன். பல நல்ல பொருட்களால் நிரம்பிய தேசத்திற்கு உங்களை வழிநடத்துவேன்’ என்று சொன்னார்” என்று சொல். “மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய ராஜாவிடம் செல்லுங்கள். நீ ராஜாவிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும்’ என்று சொல்லுங்கள். “ஆனால் எகிப்திய ராஜா உங்களைப் போக அனுமதிக்கமாட்டான் என்பதை அறிவேன். மிகப் பெரிய ஒரு வல்லமை மட்டுமே உங்களை அனுப்ப அவனைக் கட்டாயப்படுத்தும். ஆகையால் எனது மிகுந்த வல்லமையை எகிப்துக்கு எதிராகப் பயன்படுத்துவேன். அந்த தேசத்தில் வியக்கும்படியான காரியங்கள் நிகழும்படி செய்வேன். நான் இதைச் செய்தபிறகு, அவன் உங்களைப் போக அனுமதிப்பான். இஸ்ரவேல் ஜனங்களிடம் எகிப்திய ஜனங்கள் இரக்கம்கொள்ளும்படி செய்வேன். எகிப்தைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் ஜனங்களுக்கு எகிப்தியர்கள் பல வெகுமதிகளைக் கொடுப்பார்கள்.