யாத்திராகமம் 2:5-10

யாத்திராகமம் 2:5-10 TAERV

அப்போதுதான் பார்வோனின் குமாரத்தி குளிப்பதற்காக நதிக்கு வந்தாள். உயர்ந்த புற்களிடையே இருந்த கூடையை அவள் கண்டாள். நதியருகே அவளது வேலைக்காரிகள் நடந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் கூடையை எடுத்து வருமாறு அவள் கூறினாள். ராஜாவின் குமாரத்தி கூடையைத் திறந்து அதில் ஒரு ஆண் குழந்தையைக் கண்டாள். அக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அவள் அதற்காக மனமிரங்கினாள். அது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று என்பதை அவள் அறிந்தாள். அங்கே நின்றுகொண்டிருந்த குழந்தையின் சகோதரி ராஜாவின் குமாரத்தியை நோக்கி, “நான் போய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கும், அதைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா?” என்றாள். ராஜாவின் குமாரத்தியும், “தயவு செய்து அவ்வாறே செய்” என்றாள். எனவே அப்பெண் சென்று, குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். ராஜாவின் குமாரத்தி அத்தாயை நோக்கி, “குழந்தையை எடுத்து எனக்காக அதற்குப் பாலூட்டு. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உனக்குப் பணம் கொடுப்பேன்” என்றாள். எனவே, அப்பெண் குழந்தையை எடுத்துச் சென்று, அதனை வளர்த்தாள். குழந்தை வளர்ந்தது. சில காலத்திற்குப் பிறகு, அவள் அக்குழந்தையை ராஜாவின் குமாரத்தியிடம் கொடுத்தாள். ராஜாவின் குமாரத்தி குழந்தையைத் தன் சொந்த குமாரனாகவே ஏற்றுக்கொண்டாள். அக்குழந்தையை தண்ணீரிலிருந்து எடுத்ததால் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.