யாத்திராகமம் 2:15-22

யாத்திராகமம் 2:15-22 TAERV

மோசே செய்ததைக் குறித்து பார்வோன் கேள்விப்பட்டு, அவன் மோசேயைக் கொல்ல முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து மோசே தப்பி ஓடி, மீதியான் தேசத்திற்குச் சென்றான். மீதியானின் ஒரு கிணற்றருகே மோசே நின்றான். ஏழு பெண்களைப் பெற்ற ஒரு ஆசாரியன் மீதியானில் இருந்தான். அப்பெண்கள் வந்து தம்முடைய தந்தையின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படிக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்த சில மேய்ப்பர்கள் அப்பெண்களைத் துரத்தி, அவர்கள் தண்ணீர் இறைக்க முடியாதபடி செய்தனர். மோசே அப்பெண்களுக்கு உதவி, அவர்களின் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்தான். பின் அப்பெண்கள் தங்கள் தந்தையாகிய ரெகுவேலிடம் சென்றனர். அவர்கள் தந்தை அவர்களிடம், “இன்று சீக்கிரமாக வந்துவிட்டீர்களே!” என்று கேட்டான். அப்பெண்கள், “மேய்ப்பர்கள் எங்களைத் துரத்திவிட முயன்றதால் ஒரு எகிப்திய மனிதன் எங்களுக்கு உதவினான். அவன் எங்களுக்கும் எங்கள் ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்று பதில் சொன்னார்கள். எனவே, ரெகுவேல் அவனது பெண்களை நோக்கி, “அம்மனிதன் எங்கே? ஏன் அவனை விட்டு வந்தீர்கள்? அவனை அழையுங்கள், அவன் நம்மோடு சாப்பிடட்டும்” என்றான். மோசே அம்மனிதனோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தான். ரெகுவேல், தனது குமாரத்தியாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்து வைத்தான். சிப்போராள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். மோசே அவனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டான். தனக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியனாக இருந்தமையால் மோசே அவனுக்கு இப்பெயரை வைத்தான்.

யாத்திராகமம் 2:15-22 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்