யாத்திராகமம் 2:11-16

யாத்திராகமம் 2:11-16 TAERV

மோசே வளர்ந்து, பெரியவனானான். அவனது சொந்த ஜனங்களாகிய எபிரெயர்கள் கடினமாக உழைப்பதற்கு வற்புறுத்தப்படுவதைக் கண்டான். ஒரு நாள் ஒரு எபிரெய மனிதனை, எகிப்திய மனிதன் ஒருவன் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். மோசே சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதைக் கண்டான். பின் மோசே, எகிப்தியனைக் கொன்று, அவனை மண்ணில் புதைத்தான். மறுநாள் இரண்டு எபிரெய மனிதர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதையும், அவர்களில் ஒருவன் செய்தது தவறாயிருப்பதையும் மோசே பார்த்தான். மோசே அம்மனிதனை நோக்கி, “நீ ஏன் உனது அயலானை அடிக்கிறாய்?” என்று கேட்டான். அம்மனிதன் அதற்குப் பதிலாக, “எங்களுக்கு அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் இருக்கும்படியாக உன்னிடம் யாராவது கூறினார்களா? நீ எகிப்தியனை நேற்று கொன்றதுபோல என்னையும் கொல்லப் போகிறாயா?” என்றான். இதைக் கேட்டு மோசே அஞ்சினான். மோசே தனக்குள், “நான் செய்ததை எல்லோரும் இப்போது அறிந்திருக்கிறார்கள்” என்று நினைத்துக்கொண்டான். மோசே செய்ததைக் குறித்து பார்வோன் கேள்விப்பட்டு, அவன் மோசேயைக் கொல்ல முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து மோசே தப்பி ஓடி, மீதியான் தேசத்திற்குச் சென்றான். மீதியானின் ஒரு கிணற்றருகே மோசே நின்றான். ஏழு பெண்களைப் பெற்ற ஒரு ஆசாரியன் மீதியானில் இருந்தான். அப்பெண்கள் வந்து தம்முடைய தந்தையின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படிக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.