யாத்திராகமம் 15:1-18

யாத்திராகமம் 15:1-18 TAERV

அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்: “நான் கர்த்தரைப் பாடுவேன்! அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார், அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலில் தள்ளினார். கர்த்தரே எனது பலம். அவர் என்னை மீட்கிறார். நான் அவரைத் துதித்துப்பாடுவேன் கர்த்தரே எனது தேவன், நான் அவரைத் துதிப்பேன். கர்த்தர் எனது முற்பிதாக்களின் தேவன். நான் அவரை மதிப்பேன். கர்த்தர் யுத்தத்தில் சிறந்தவர், கர்த்தர் என்பது அவரது பெயர். பார்வோனின் இரதங்களையும், வீரர்களையும் அவர் கடலில் தள்ளினார். பார்வோனின் சிறந்த வீரர்கள் செங்கடலில் அமிழ்ந்தனர். ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக்கொண்டது. அவர்கள் கடலினடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர். “உமது வலது கரம் வியக்கத்தகும் வல்லமை உடையது. கர்த்தாவே, உமது வலது கரம் பகைவர்களைச் சிதறடித்தது. உமது பெருமையால் உமக்கு எதிராக நின்ற ஜனங்களை நீர் அழித்தீர். உமது கோபம் அவர்களை வைக்கோலில் பற்றும் நெருப்பைப் போல அழித்தது. உமது உக்கிரத்தின் பெருமூச்சால் தண்ணீர் மேலெழும்பிற்று, ஒழுகும் தண்ணீர் திடமான சுவராயிற்று. ஆழத்தின் அஸ்திபாரம்வரைக்கும் கடல் தண்ணீர் திடன் கொண்டது. “நான் தொடர்ந்து பிடிப்பேன், ‘நான் அவர்கள் செல்வத்தைப் பறிப்பேன். எனது வாளால் அவற்றை அபகரிப்பேன். நான் எல்லாவற்றையும் எனக்காக எடுப்பேன்’ என்று பகைவன் சொன்னான். ஆனால் நீர் அவர்கள் மேல் ஊதி, கடலால் அவர்களை மூடினீர். ஆழ்கடலில் அவர்கள் ஈயத்தைப் போல மூழ்கினார்கள். “கர்த்தரைப்போன்ற தேவர்கள் உள்ளனரோ? இல்லை! உம்மைப்போன்ற தேவர்கள் எவருமில்லை! நீர் மேலான பரிசுத்தமானவர்! நீர் வியக்கத்தக்க ஆற்றல் வாய்ந்தவர்! நீர் மாபெரும் அற்புதங்கள் செய்பவர்! வலதுகரத்தை உயர்த்தி உலகத்தை அழிக்க உம்மால் முடியும். ஆனால் உமது இரக்கத்தால் நீர் மீட்ட ஜனங்களை வழிநடத்துகிறீர். உமது வல்லமையால் அவர்களைப் பரிசுத்தமும், இன்பமுமான நாட்டிற்குள் நடத்துகிறீர். “பிற ஜாதிகள் இதைக் கேட்டு, பயந்து நடுங்குவார்கள். பெலிஸ்தியர் பயத்தால் நடுங்குவார்கள். ஏதோமின் தலைவர்கள் பயத்தால் நடுங்குவார்கள். மோவாபின் தலைவர் பயத்தால் நடுங்குவார்கள். கானானின் ஜனங்கள் துணிவிழப்பார்கள். அவர்கள் உமது ஆற்றலைக் காண்கையில் அச்சத்தால் நிரம்புவார்கள். கர்த்தரின் ஜனங்கள் செல்லும்மட்டும், உம்மால் உண்டாக்கப்பட்ட உமது ஜனங்கள் கடந்து செல்லும்மட்டும் அவர்கள் உறுதியான பாறையைப் போல ஸ்தம்பித்து நிற்பார்கள். கர்த்தாவே நீர் உம்முடைய ஜனங்களை உம்முடைய மலைக்கு வழிநடத்துவீர். உமது சிங்காசனத்திற்காக நீர் தேர்ந்தெடுத்த இடத்தினருகே அவர்களை வாழச்செய்வீர். ஆண்டவரே, நீர் உமது ஆலயத்தைக் கட்டுவீர்! “கர்த்தாவே நீர் என்றென்றும் ஆளுகை செய்வீர்!”