எபேசியருக்கு எழுதிய கடிதம் 5:17-33

எபேசியருக்கு எழுதிய கடிதம் 5:17-33 TAERV

ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள். ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள். மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள். கணவன்மார்களே! கிறிஸ்து சபையை நேசிக்கிறதுபோல நீங்கள் உங்கள் மனைவியரை நேசியுங்கள். கிறிஸ்து சபைக்காகவே இறந்தார். சபையைப் புனிதமாக்கவே அவர் இறந்தார். சரீரத்தைத் தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்துவது போலவே திருவசனத்தைப் பயன்படுத்தி சபையைத் தூய்மை செய்கிறார். கிறிஸ்து இறந்து போனதால் அவர் சபையை அழகுமிக்க மணமகளைப் போன்று ஆக்க, தம்மையே தந்தார். இதனால் சபை புனிதமானதாக, குற்றம் இல்லாததாக, கேடோ, பாவமோ, வேறு தவறுகளோ நடைபெறாத இடமாக ஆக்க விரும்பினார். இதுபோல கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும். ஏனென்றால் எவன் ஒருவனும் தன் சொந்த சரீரத்தை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தம் சரீரத்தை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான். இதைத்தான் கிறிஸ்துவும் சபைக்காகச் செய்தார். ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள். “ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரகசியமான உண்மை மிக முக்கியமானது. எனினும் ஒவ்வொருவரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.