தானியேலின் புத்தகம் 6:19-27

தானியேலின் புத்தகம் 6:19-27 TAERV

மறுநாள் காலையில் கிழக்கு வெளுக்கும்போது ராஜாவாகிய தரியு எழுந்து சிங்கங்களின் குகைக்கு ஓடினான். ராஜா மிகத்துயரமாக இருந்தான். அவன் சிங்கங்களின் குகைக்கருகில் போய், தானியேலைக் கூப்பிட்டான். ராஜா, “தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய ஊழியனே, நீ எப்பொழுதும் உன் தேவனுக்குச் சேவைசெய்கிறாயே, உனது தேவனால் உன்னைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?” என்றான். தானியேல் அதற்குப் பதிலாக, “ராஜாவே, நீர் என்றென்றும் வாழ்க. தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். ராஜாவே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான். ராஜாவாகிய தரியு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது வேலைக்காரர்களிடம் சிங்ககுகையிலிருந்து தானியேலை வெளியேற்றும்படிச் சொன்னான். தானியேலைச் சிங்கக்குகையிலிருந்து வெளியே அழைத்தபோது அவர்கள் அவன் உடலில் எவ்வித காயத்தையும் காணவில்லை. தானியேல் சிங்கங்களால் காயப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவனிடம் விசுவாசம் வைத்தான். பிறகு ராஜா, தானியேல்மீது குற்றம் சாட்டி அவனைச் சிங்கக்குகைக்குள் அனுப்பியவர்களைக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டான். அம்மனிதர்களும் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் சிங்கக்குகைக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் குகையின் தரைக்குள் விழுவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களது உடல்களைக் கிழித்து எலும்புகளை மென்று உண்டன. பிறகு ராஜாவாகிய தரியு பின்வரும் கடிதத்தை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழி பேசுகிற அனைத்து ஜனங்களுக்கும் எழுதினான்: வாழ்த்துக்கள்: நான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறேன். இச்சட்டம் என் இராஜ்யத்தில் உள்ள எல்லாப் பகுதி ஜனங்களுக்கும் உரியது. நீங்கள் எல்லோரும் தானியேலின் தேவனுக்கு அஞ்சி மரியாதை செய்ய வேண்டும். தானியேலின் தேவன் ஜீவனுள்ள தேவன், தேவன் என்றென்றும் இருக்கிறார். அவரது இராஜ்யம் என்றென்றும் அழியாதது. அவரது ஆட்சி முடிவில்லாதது. தேவன் ஜனங்களுக்கு உதவிசெய்து காப்பாற்றுகிறார். தேவன் பரலோகத்திலும் பூமியிலும் அற்புதங்களைச் செய்கிறார். ஆண்டவர் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்.