தானியேலின் புத்தகம் 6:1-10

தானியேலின் புத்தகம் 6:1-10 TAERV

தரியு தனது இராஜ்யம் முழுவதையும் ஆளுவதற்கு 120 தேசாதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல திட்டமென்று எண்ணினான். அவன் அந்த 120 தேசாதிபதிகளையும் கட்டுப்படுத்த மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தான். இந்த மூன்று மேற்பார்வையாளர்களில் தானியேலும் ஒருவன். ராஜா இவ்வாறு ஓர் ஏற்பாடு செய்துவிட்டதால் எவரும் அவனை ஏமாற்ற முடியாது. அதோடு அவன் தனது இராஜ்யத்தில் எதையும் இழக்கமாட்டான். தானியேல் தன்னை மற்ற மேற்பார்வையாளர்களைவிடச் சிறந்தவனாகக் காட்டினான். தானியேல் இதனைத் தனது நற்குணங்கள் மூலமும், நல்ல திறமைகள் மூலமும் செய்தான். ராஜா தானியேலின்மேல் மிகவும் வியப்படைந்தான். அவன் தானியேலை இராஜ்யம் முழுவதற்கும் ஆளுநாரக்கிவிடலாம் என்று திட்டமிட்டான். ஆனால் மற்ற மேற்பார்வையளர்களும், மற்ற தேசாதிபதிகளும் இதனை அறிந்ததும் மிகவும் பொறாமைகொண்டனர். அவர்கள் தானியேலை குற்றஞ்சாட்ட காரணங்களைத் தேடினர். எனவே அவர்கள் தானியேல் அரசு பணிகளைச் செய்யும்போது மிகக் கவனமாகக் கவனித்தனர். ஆனால் அவர்களால் தானியேலிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தானியேல் நேர்மையாளனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அவன் ராஜாவை ஏமாற்றாமல் மிகக் கடுமையாக வேலை செய்து வந்தான். இறுதியாக அந்த ஆட்கள், “நாம் தானியேலை குற்றம் கண்டுபிடிக்கும்படி தவறான எதையும் அவன் செய்யமாட்டான். எனவே நாம் அவனது தேவனுடைய சட்ட விஷயத்தில் குற்றம் காண வேண்டும்” என்று பேசிக்கொண்டனர். எனவே, அந்த மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும் ஒரு குழுவாக ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அரசரை நோக்கி, “தரியு ராஜாவே, என்றென்றும் வாழ்வீராக. மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டார்கள். அதாவது நாங்கள் ராஜா ஒரு சட்டத்தைச் இயற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். எல்லோரும் அதற்கு அடி பணியவேண்டும். இதுதான் அந்தச் சட்டம், எவராவது இன்னும் 30 நாட்களுக்கு ராஜாவாகிய உம்மைத் தவிர வேறெந்த தேவனையோ, மனிதரையோ நோக்கி எந்த ஒரு காரியத்திற்கும் ஜெபம் செய்தால் அவன் சிங்கக்கூண்டிலே போடப்படுவான். இப்பொழுது இதனைச் சட்டமாக்கி இந்தத் தாளிலே கையெழுத்துப் போடும். இவ்வாறு இந்தச் சட்டம் மாற்ற முடியாதபடி இருக்கும். ஏனென்றால் மேதியர்கள் மற்றும் பெர்சியர்களின் சட்டங்கள் விலக்கவோ மாற்றவோ முடியாதவை” என்றனர். அவர்கள் சொன்னபடி ராஜாவான தரியு இச்சட்டத்தை இயற்றி கையெழுத்துப் போட்டான். தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான்.