தானியேலின் புத்தகம் 11:29-35

தானியேலின் புத்தகம் 11:29-35 TAERV

“ஏற்ற காலத்தில் வடபகுதி ராஜா தென் பகுதி ராஜாவை மறுபடியும் தாக்குவான். ஆனால் இந்த முறை அவன் முன்புபோல வெற்றிபெறமாட்டான். கித்தீமிலிருந்து கப்பல்கள் வந்து வட பகுதி ராஜாவுக்கு எதிராகப் போரிடும். அக்கப்பல்கள் வந்து அவனை அச்சுறுத்துவதை அவன் காண்பான். பிறகு அவன் திரும்பிப் போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபங்கொள்வான். அவன் திரும்பி, பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைவிட்டவர்களை ஆதரிப்பான். வடபகுதி ராஜா தனது படையை எருசலேம் ஆலயத்தில் பயங்கரமான செயல்களைச் செய்ய அனுப்புவான். அவர்கள் ஜனங்களைத் தினபலி கொடுக்காதபடிக்குத் தடுப்பார்கள். பிறகு அவர்கள் உண்மையிலேயே பயங்கரமான செயல்களைச் செய்வார்கள். அழிவுக்குக் காரணமாகும் அந்தப் பயங்கரமான காரியத்தை ஏற்படுத்துவார்கள். “வடபகுதி ராஜா பொய்களையும் இச்சகப் பேச்சையும் பயன்படுத்தி பரிசுத்த உடன்படிக்கையைப் பின்பற்றுவதை யூதர்கள் கைவிடும்படி செய்வான். அந்த யூதர்கள் மீண்டும் மிக மோசமான பாவங்களைச் செய்வார்கள். ஆனால் தேவனை அறிந்த, அவருக்குக் கீழ்ப்படிகிற யூதர்கள் பலம் பெறுவார்கள். அவர்கள் திரும்பி எதிர்த்து போரிடுவார்கள். “அந்த யூதர்களில் ஞானமுள்ளவர்கள் பலருக்கு அறிவை உணர்த்துவார்கள். ஆனாலும் ஞானிகள் கூட கொடுமைப்படுத்தப்படுவார்கள். சில ஞானமுள்ள யூதர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் எரிக்கப்படுவார்கள், அல்லது சிறைபடுத்தப்படுவார்கள். சில யூதர்களின் சொத்துக்களும் வீடுகளும் கொள்ளையடிக்கப்படும். அறிவுமிக்க யூதர்கள் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கொஞ்சம் உதவியும் பெறுவார்கள். ஆனால் அவர்களோடு சேரும் அநேக யூதர்கள் போலிகளாக இருப்பார்கள். அறிவுமிக்க யூதர்களில் சிலர் தவறுகள் செய்து விழுவார்கள். ஆனாலும் கொடுமைக் காலம் வர வேண்டும். ஏனென்றால் அப்பொழுது அவர்கள் பலமுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் ஆகமுடியும். இது முடிவுகாலம் வரும்வரை இருக்கும். பிறகு, சரியான நேரத்தில் முடிவு காலம் வரும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த தானியேலின் புத்தகம் 11:29-35