அனனியா என்றொரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சப்பீராள். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தை அனனியா விற்றான். ஆனால் தனக்குக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே அவன் அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தான். மீதியிருந்த பணத்தை இரகசியமாக தனக்கென வைத்துக்கொண்டான். அவன் மனைவி இதனை அறிந்து இத்திட்டத்துக்கு ஒப்புக்கொண்டாள். பேதுரு “அனனியாவே, சாத்தான் உனது இருதயத்தை ஆள ஏன் அனுமதித்தாய்? நீ பொய் கூறி, பரிசுத்த ஆவியை ஏமாற்ற முயன்றாய். நீ உனது நிலத்தை விற்றாய். ஆனால் பணத்தில் ஒரு பகுதியை ஏன் உனக்காக வைத்துக்கொண்டாய்? நீ நிலத்தை விற்கும் முன்பு அது உனக்கு உரியதாக இருந்தது. நீ அதனை விற்ற பிறகும் அந்தப் பணத்தை நீ விரும்பிய வகையில் செலவழித்திருக்கலாம். ஏன் இந்தத் தீய செயலைச் செய்வதற்கு எண்ணினாய்? நீ தேவனிடம் பொய் கூறினாய், மனிதரிடம் அல்ல!” என்றான். அனனியா இதனைக் கேட்டபோது, கீழே விழுந்து உயிர்விட்டான். சில இளைஞர்கள் வந்து அவன் சரீரத்தைப் பொதிந்தனர். அதனை வெளியே எடுத்துச்சென்று புதைத்தனர். இதைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மனமும் அச்சத்தால் நிரம்பியது. சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை. பேதுரு அவளை நோக்கி, “உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா?” என்று கேட்டான். சப்பீராள் பதிலாக, “ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது” என்றாள். பேதுரு அவளை நோக்கி, “கர்த்தருடைய ஆவியைச் சோதிப்பதற்கு நீயும் உன் கணவனும் ஏன் ஒத்துக்கொண்டீர்கள்? கவனி, அந்தக் காலடிகளின் சத்தத்தைக் கேட்டாயா? உனது கணவனைப் புதைத்த மனிதர்கள் கதவருகே வந்துவிட்டனர். உன்னையும் அவர்கள் அவ்வாறே சுமந்து செல்வர்” என்றான். அதே கணத்தில் சப்பீராள் அவன் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். அம்மனிதர்கள் உள்ளே வந்து அவள் இறந்துவிட்டதைக் கண்டனர். அவர்கள் அவளைச் சுமந்துசென்று, அவளது கணவனின் அருகே புதைத்தனர். விசுவாசிகளனைவரும், இந்தக் காரியங்களைக் குறித்துக் கேட்ட பிற மக்களும் பயத்தால் நிரம்பினர். அப்போஸ்தலர்கள் அதிசயங்கள் பலவற்றையும், வல்லமைமிக்க காரியங்களையும் செய்தனர். எல்லா மக்களும் இந்தக் காரியங்களைப் பார்த்தனர். சாலோமோனின் மண்டபத்தில் அப்போஸ்தலர்கள் கூடியிருந்தனர். அவர்கள் ஒரே நோக்கம் உடையோராக இருந்தனர். வேறு எந்த மக்களும் அவர்களோடு அங்கு நிற்பதற்குத் தகுதியானவர்களாகத் தங்களைக் கருதவில்லை. அப்போஸ்தலர்களை எல்லா மக்களும் மிகவும் புகழ்ந்தார்கள். மேலும், மேலும் மிகுதியான மக்கள் கர்த்தரில் நம்பிக்கை வைத்தனர். பல பெண்களும் ஆண்களும் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். எனவே மக்கள் தங்களுடைய நோயாளிகளை தெருவுக்குக் கொண்டு வந்தனர். பேதுரு அவ்வழியே வருகிறானென்று கேள்விப்பட்டனர். எனவே மக்கள் நோயாளிகளை சிறு கட்டில்களிலும் படுக்கைகளிலும் படுக்கவைத்தனர். பேதுருவின் நிழல் நோயாளிகள் மீது விழுந்தால் கூட அவர்கள் குணமாவதற்கு அதுவே போதும் என்று அவர்கள் நம்பி பேதுரு நடக்கும் வழியில் அவர்களைப் படுக்க வைத்தனர். எருசலேமின் சுற்றுப் புறத்திலுள்ள எல்லா ஊர்களிலுமிருந்து மக்கள் வந்தனர். நோயாளிகளையும் பிசாசின் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்டோரையும் அவர்கள் கொண்டு வந்தனர். இந்த மக்கள் எல்லோரும் குணம் பெற்றனர். தலைமை ஆசாரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். ஆனால் இரவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் சிறையின் கதவுகளைத் திறந்தான். தேவ தூதன் அப்போஸ்தலர்களை வெளியே அழைத்துச் சென்று அவர்களை நோக்கி, “செல்லுங்கள். தேவாலயத்தில் போய் நில்லுங்கள். இப்புதிய வாழ்க்கையைக் குறித்த ஜீவ வார்த்தைகள் அனைத்தையும் மக்களுக்குக் கூறுங்கள்” என்றான். அப்போஸ்தலர்கள் இதைக் கேட்டபோது அவ்வாறே கீழ்ப்படிந்து தேவாலயத்துக்குச் சென்றார்கள். அது அதிகாலை வேளையாக இருந்தது. அப்போஸ்தலர்கள் மக்களுக்குப் போதிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசாரியனும் அவனது நண்பர்களும் தேவாலயத்துக்கு வந்தனர். யூதத் தலைவர்களும் எல்லா முக்கியமான யூத முதியவர்களும் கூடி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போஸ்தலர்களை அவர்களிடம் அழைத்து வருவதற்கெனச் சில மனிதர்களை அனுப்பினர்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:1-21
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்