அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1-12

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1-12 TAERV

அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர். எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள். பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான். அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர். பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று, மிகவும் துணிவாகப் பேசினான். பவுல் மூன்று மாதங்கள் இதைச் செய்தான். அவன் யூதர்களிடம் தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிப் பேசி, அவற்றை யூதர்கள் ஏற்றுக்கொள்ளும்படித் தூண்ட முயற்சித்தான். ஆனால் சில யூதர்கள் பிடிவாதமாக இருந்தனர். அவர்கள் நம்ப மறுத்தனர். இந்த யூதர்கள் தேவனுடைய வழியைக் குறித்துத் தீயவற்றைப் பேசினர். எல்லா மக்களும் இவற்றை கேட்டனர். எனவே பவுல் இந்த யூதரை விட்டு நீங்கி, இயேசுவின் சீஷர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். திறன்னு என்ற ஒருவனின் பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்குப் பவுல் போனான். பவுல் அங்கிருந்த மக்களுடன் தினமும் கலந்துரையாடினான். பவுல் இதை இரண்டு வருடங்கள் செய்தான். இச்செயலால் ஆசியாவில் வசித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு யூதனும் கிரேக்கனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டனர். சில அசாதாரணமான அற்புதங்களைச் செய்வதற்கு தேவன் பவுலைப் பயன்படுத்தினார். பவுல் பயன்படுத்திய துணிகளையும் கைக்குட்டைகளையும் சிலர் எடுத்துச் சென்றனர். இவற்றை மக்கள் நோயாளிகள் மீது வைத்தனர். அவர்கள் இதைச் செய்தபோது, நோயாளிகள் குணமடைந்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களைவிட்டு நீங்கிச் சென்றன.