அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:1-15

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:1-15 TAERV

அம்பிபோலி, அப்போலோனியா நகரங்கள் வழியாகப் பவுலும் சீலாவும் பிரயாணம் செய்தனர். அவர்கள் தெசலோனிக்கே நகரத்திற்கு வந்தனர். அந்நகரில் யூதர்களின் ஜெப ஆலயம் ஒன்று இருந்தது. யூதர்களைப் பார்க்கும்படியாகப் பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்றான். இதையே அவன் எப்போதும் செய்தான். மூன்று வாரங்கள் ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களைக் குறித்துப் பவுல் யூதர்களோடு பேசினான். வேதவாக்கியங்களை யூதர்களுக்கு பவுல் விவரித்தான். கிறிஸ்து இறக்க வேண்டும் என்பதையும், மரணத்திலிருந்து எழ வேண்டும் என்பதையும் காட்டினான். பவுல் “நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற மனிதனாகிய இயேசுவே கிறிஸ்து ஆவார்” என்றான். அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டு பவுலுடனும் சீலாவுடனும் இணைந்தார்கள். ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர். ஆனால் விசுவாசியாத யூதர்கள் பொறாமை கொண்டனர். நகரத்திலிருந்து சில தீய மனிதர்களை கூலிக்காக அமர்த்திக்கொண்டனர். இத்தீய மனிதர்கள் பல மக்களைச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் கலகம் விளைவித்தனர். பவுலையும் சீலாவையும் தேடிக்கொண்டு இந்த மனிதர்கள் யாசோனின் வீட்டிற்குச் சென்றனர். பவுலையும் சீலாவையும் நகர சபையின் முன்பாக அழைத்து வரவேண்டுமென்று அம்மனிதர்கள் கேட்டனர். ஆனால் அவர்கள் பவுலையும் சீலாவையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மக்கள் யாசோனையும், வேறு சில விசுவாசிகளையும் நகரின் தலைவர்கள் முன்பாக இழுத்து வந்தனர். மக்கள் எல்லோரும், “இம்மனிதர்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் கலகமுண்டாக்கினார்கள். இப்போது இவர்கள் இங்கும் வந்துவிட்டனர்! யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வைத்திருக்கிறான். இராயரின் சட்டங்களுக்கு எதிரான செயல்களை அவர்களெல்லாம் செய்கின்றனர். இயேசு என்னும் இன்னொரு மன்னன் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்” என்று கூக்குரலிட்டனர். நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள். யாசோனும் பிற விசுவாசிகளும் தண்டனைப் பணம் செலுத்தும்படியாகச் செய்தனர். பின் விசுவாசிகளை விடுதலை செய்து போகும்படி அனுமதித்தனர். அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள். இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர். எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர். பவுலோடு சென்ற விசுவாசிகள் அவனை அத்தேனே நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். பவுலிடமிருந்து அந்தச் சகோதரர்கள் சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் குறிப்புகளை எடுத்துச் சென்றனர். அக்குறிப்புகள், “எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் என்னிடம் வாருங்கள்” என்றன.