அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர். இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார். எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர். பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்). அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி. ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான். ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து, “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான். அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான். பாப்போவிலிருந்து பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் கடற் பயணமாயினர். பம்பிலியாவிலுள்ள பெர்கே என்னும் நகரத்திற்கு அவர்கள் வந்தனர். ஆனால் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பினான். அவர்கள் பயணத்தைத் தொடர்ந்து பெர்கேவிலிருந்து பிசிதியாவுக்கு அருகேயுள்ள நகராகிய அந்தியோகியாவுக்குப் போனார்கள். அந்தியோகியாவில் ஓய்வுநாளில் யூத ஜெப ஆலயத்திற்குள் போய் அமர்ந்தார்கள். மோசேயின் நியாயப் பிரமாணமும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் வாசிக்கப்பட்டன. பின் ஜெப ஆலயத் தலைவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஒரு செய்தி அனுப்பினர். “சகோதரரே, நீங்கள் இங்குள்ள மக்களுக்கு உதவுமாறு ஏதேனும் கூறவேண்டியிருந்தால் தயவு செய்து பேசுங்கள்” என்றனர். பவுல் எழுந்து நின்றான். அவன் அமைதிக்காகத் தன் கைகளை உயர்த்தி, “எனது யூத சகோதரர்களே, உண்மையான தேவனை வழிபடும் மக்களே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவன் நமது முன்னோரைத் தெரிந்துகொண்டார். அவர்கள் அந்நியராக எகிப்தில் வாழ்ந்த காலத்தில் தேவன் அவரது மக்களுக்கு உதவினார். மிகுந்த வல்லமையால் அந்நாட்டிலிருந்து அவர்களை அழைத்து வந்தார். வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களோடு பொறுமையாக இருந்தார். கானானிலுள்ள ஏழு தேசங்களை தேவன் அழித்தார். அவரது மக்களுக்கு அவர்கள் நாட்டைக் கொடுத்தார். இவையெல்லாம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளில் நடந்தன. “இதன் பிறகு, சாமுவேல் என்னும் தீர்க்கதரிசியின் காலம் வரைக்கும் தேவன் நமது மக்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்தார். பின் மக்கள் ஒரு மன்னன் வேண்டுமென்று கேட்டனர். தேவன் அவர்களுக்கு கீஷ் என்பவனின் குமாரனாகிய சவுலைக் கொடுத்தார். சவுல் பென்யமீனின் குடும்ப மரபில் வந்தவன். அவன் நாற்பது ஆண்டுகள் மன்னனாக இருந்தான். தேவன் சவுலை எடுத்துக்கொண்ட பிறகு தாவீதை அவர்களுக்கு மன்னனாக்கினார். தாவீதைக் குறித்து தேவன் கூறியதாவது: ‘ஈசாயின் குமாரனான தாவீதை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னென்ன செய்யவேண்டுமென நான் நினைக்கிறவற்றை அவன் செய்வான்’ “தேவன் தாவீதின் தலைமுறையினரில் ஒருவரை இஸ்ரவேலுக்கு மீட்பராக அனுப்பினார். அவ்வாறு வந்தவர்தான் இயேசு. தேவன் இதைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். இயேசு வரும் முன்னர் எல்லா யூத மக்களுக்கும் யோவான் போதித்தான். அவர்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புவதைக் காட்டும் பொருட்டு யோவான் மக்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். யோவான் தன் வேலையை முடித்துக்கொண்டிருக்கும் போது அவன், ‘நான் யாரென்று நினைக்கிறீர்கள். நான் கிறிஸ்து அல்ல. அவர் எனக்குப் பின் வருவார். அவர் மிதியடிகளை அவிழ்ப்பதற்கும் எனக்குத் தகுதி கிடையாது’ என்றான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 13
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:1-25
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்