அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:4-11

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:4-11 TAERV

ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16 வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியுமட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான். எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டான். ஆனால் சபையினரோ பேதுருவுக்காகத் தொடர்ந்து தேவனிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர். இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிகமான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக்கொண்டிருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான். அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவ தூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன், “விரைந்து எழு!” என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன. தேவதூதன் பேதுருவை நோக்கி, “ஆடைகளை உடுத்து, செருப்புகளை அணிந்துகொள்” என்றான். அவ்வாறே பேதுருவும் செய்தான். பின் தேவ தூதன் “அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா” என்றான். தேவதூதன் வெளியே சென்றான். பேதுருவும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண்மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான். பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந்தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானாகவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான். நடந்தது என்னவென்பதைப் பேதுரு அப்போது உணர்ந்தான். அவன், “கர்த்தர் உண்மையாகவே தனது தேவதூதனை என்னிடம் அனுப்பினார் என்பதை நான் அறிவேன். ஏரோதிடமிருந்து அவன் என்னை விடுவித்தான். தீமை எனக்கு நேருமென்று யூதர்கள் எண்ணினர். ஆனால் கர்த்தர் இவற்றிலிருந்து என்னைக் காத்தார்” என்று எண்ணினான்.