அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1-23

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1-23 TAERV

செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான். கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான். தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான். கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன். கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான். மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது. திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது. ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான். ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது. இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள். பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார். எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான். அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர். பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான். மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர்.