அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:1-8

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:1-8 TAERV

அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன். இது நடக்கும் முன் இயேசு தான் தேர்ந்தெடுத்த அப்போஸ்தலர்களிடம் பேசினார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றை இயேசு அவர்களுக்குக் கூறினார். இது இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஆனால் அவர் அப்போஸ்தலருக்குத் தான் உயிரோடிருப்பதைக் காட்டினார். வல்லமைமிக்க செயல்கள் பலவற்றைச் செய்து இயேசு இதை நிரூபித்தார். இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார். ஒருமுறை இயேசு அவர்களோடு உணவு உட்கொண்டு இருக்கும்போது எருசலேமை விட்டுப் போக வேண்டாமென அவர்களுக்குக் கூறினார். இயேசு, “பிதா உங்களுக்குச் சிலவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்துள்ளார். இதைக் குறித்து முன்னரே நான் உங்களுக்குக் கூறினேன். இங்கேயே எருசலேமில் இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காகக் காத்திருங்கள். யோவான் மக்களுக்கு, தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் ஒரு சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று சொன்னார். அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள். இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்.