தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:1-9

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3:1-9 TAERV

இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு. சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது.