பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 2:5-11

பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 2:5-11 TAERV

ஆதிகாலத்தில் வாழ்ந்த தீய மக்களையும் தேவன் தண்டித்தார். தேவனுக்கு எதிரான மக்கள் நிறைந்த உலகின் மேல் தேவன் வெள்ளம் பெருகியோடச் செய்தார். ஆனால் நோவாவையும், நோவாவோடு வேறு ஏழு பேரையும் தேவன் காப்பாற்றினார். சரியான வழியில் வாழ்வதுபற்றி மக்களுக்குப் போதித்த மனிதன் நோவா ஆவான். சோதோம், கொமோரா என்னும் தீய நகரங்களையும் தேவன் தண்டித்தார். சாம்பலைத் தவிர வேறெதுவும் இல்லாத வகையில் தேவன் அந்த நகரங்களை நெருப்பால் முற்றிலும் அழித்தார். தேவனுக்கு எதிரான மக்களுக்கு நடக்கவிருப்பதைத் தெரிவிக்கும் எடுத்துக்காட்டாக தேவன் அந்நகரங்களுக்குச் செய்தார். ஆனால் தேவன் அந்நகரங்களினின்று லோத்துவைக் காப்பாற்றினார். லோத்து மிக நல்ல மனிதன். எந்தச் சட்டமுமற்ற மனிதர்களின் அநீதியான நடத்தையால் அவன் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தான். (லோத்து நல்ல மனிதன். ஆனால் நாள் தோறும் அவன் அத்தீய மனிதரோடு, வாழ்ந்து வந்தான். அவன் பார்த்ததும் கேட்டதுமாகிய தீய காரியங்களினால் லோத்தின் நல்ல மனம் வேதனையடைந்திருந்தது) ஆம், தேவன் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்தார். ஆகவே தமக்கு சேவை செய்கிற மக்களை எப்படி இரட்சிப்பது என கர்த்தர் அறிவார். மேலும் நியாயம்தீர்க்கிற நாள்வரை தீயவர்களைத் தண்டிப்பது எப்படி என்றும் அறிவார். குறிப்பாக பாவங்களால் நிறைந்து ஊழல்கள் மலிந்த வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கர்த்தரின் அதிகாரத்தை மீறுகிறவர்களுக்கும் இத்தண்டனை கிடைக்கும். போலிப்போதகர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார்கள். மட்டுமன்றி, தங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வார்கள். மகிமை மிக்க தேவதூதர்களைக் குறித்துத் தீயவற்றைப் பேசுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இந்தப் போலிப் போதகர்களைக் காட்டிலும் தேவதூதர்கள் வலிமையும் ஆற்றலும் மிக்கவர்கள். ஆனால் தேவதூதர்களும்கூட கர்த்தரின் முன்னிலையில் இந்தப் போலிப் போதகர்களைப் பற்றிக் குற்றம் சாட்டும்போது அவமானப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை.