தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 2:1-9

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 2:1-9 TAERV

சகோதர சகோதரிகளே! உங்களை நாடி நாங்கள் வந்தது வீணாகவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடம் வரும் முன்பு நாங்கள் பிலிப்பியில் துன்புற்றோம். அங்குள்ள மக்கள் எங்களுக்கு எதிராகக் கெட்டதாகப் பேசினார்கள். உங்களுக்கு அவை பற்றித் தெரியும். நாங்கள் உங்களிடம் வந்தபோது பலர் எதிர்த்தார்கள். ஆனால் தைரியமாக இருக்க தேவன் உதவினார். நற்செய்தியை உங்களிடம் கூறவும் உதவி செய்தார். நாங்கள் மக்களுக்கு ஊக்கமூட்டுகிறோம். ஒருவரும் எங்களை முட்டாளாக்கவில்லை. நாங்கள் தீயவர்கள் அல்லர். மக்களிடம் நாங்கள் தந்திரம் செய்ய முயற்சிக்கவில்லை. நாங்கள் நற்செய்தியைப் பரப்புகிறோம். ஏனென்றால் எங்களை சோதித்து அறிந்த பின் நற்செய்தியைச் சொல்லும் பொருட்டு தேவன் எங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார். ஆகவே நாங்கள் மனிதர்களை திருப்பதிப்படுத்த விரும்பவில்லை. தேவனை திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். தேவன் ஒருவரே நம் இதயங்களைத் தொடர்ந்து சோதனை செய்ய வல்லவர். உங்களைப் பற்றி உங்களுக்குப் பிடித்த வகையில் முகஸ்துதி செய்து திருப்திப்படுத்த நாங்கள் ஒருபோதும் முயலவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. உங்களிடம் மறைக்கத்தக்க சுயநலம் எதுவும் எங்களிடம் இருந்ததில்லை. இது உண்மை என்பது தேவனுக்குத் தெரியும். எவ்வித பாராட்டையும் மக்களிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ நாங்கள் எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம். உங்களை நாங்கள் பெரிதும் நேசித்தோம். எனவே, தேவனுடைய நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். அதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாழ்க்கையையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்தோம். சகோதர சகோதரிகளே! நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பதை நான் அறிவேன். இரவும் பகலுமாக நாங்கள் பணியாற்றினோம். தேவனுடைய நற்செய்தியைப் பரப்பும்பொழுது உங்களில் எவர்மீதும் எவ்விதமான பொருளாதார பாரத்தையும் சுமத்த விரும்பவில்லை.