சாமுவேலின் முதலாம் புத்தகம் 20:35-42

சாமுவேலின் முதலாம் புத்தகம் 20:35-42 TAERV

மறுநாள் காலை யோனத்தான் வயலுக்குப் போனான். அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் தாவீதை சந்திக்க தன்னோடு ஒரு சிறுவனை அழைத்துப் போனான். அவன் சிறுவனிடம், “நான் எறிகிற அம்பைத் தேடி கண்டுபிடித்து வா” என்றான். பையனின் தலைக்கு மேலாக எறிந்த அம்பை அவன் தேடிப்போனான். அம்பு விழுந்த இடத்தில் சிறுவன் தேட, “அம்புகள் இன்னும் தூரத்தில் உள்ளது” என்றான். மீண்டும் அவன், “சும்மா நிற்காதே! போய் அம்பைத் தேடு” என்றான். சிறுவன் அம்பைத்தேடி தன் எஜமானனிடம் எடுத்து வந்தான். என்ன நடைபெறுகிறது என்று அந்தப் பையன் அறியாதிருந்தான். ஆனால் தாவீதிற்கும் யோனத்தானுக்கும் அது புரிந்தது. யோனத்தான் சிறுவனிடம், வில்லையும் அம்பையும் கொடுத்து, “நகரத்திற்குத் திரும்பிப் போ” என்று அனுப்பினான். பையன் போனதும் தாவீது வெளியே வந்து யோனத்தானைத் தரையில் குனிந்து 3 முறை வணங்கினான். பின் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டனர். இருவரும் சத்தமிட்டு அழ, தாவீது யோனத்தானைவிட மிகுதியாக அழுதான். யோனத்தான் தாவீதிடம், “சமாதானமாகப் போ, நாம் கர்த்தருடைய நாமத்தால் நண்பர்களாக இருப்போம் என்று ஆணையிட்டோம் அதன்படியே நமக்கும் நமது சந்ததியினருக்கும் நடுவே உள்ள ஒப்பந்தத்திற்கு கர்த்தரே என்றென்றைக்கும் சாட்சியாக இருப்பார்” என்றான்.