பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 5:1-6

பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 5:1-6 TAERV

உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன். ஒரு ஆட்டு மந்தையைக் கவனித்துக்கொள்கிற மேய்ப்பர்கள்போல உங்கள் பொறுப்பில் இருக்கிற மக்களின் கூட்டத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனுடைய கூட்டத்தினர். விருப்பத்தோடு அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்விதமான நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் அதை விருப்பத்தோடு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார். பணத்துக்காகப் பேராசை பிடித்திருப்பதால் கண்காணிப்பாளர்களைப்போல சேவை செய்யாதீர்கள். சேவை செய்யும் வாஞ்சை இருப்பதால் சேவை செய்யுங்கள். நீங்கள் பொறுப்பேற்றுள்ள மக்களிடம் கொடுமையான அதிகாரியாக நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் அம்மக்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். அப்போது, தலைமை மேய்ப்பர் வரும்போது நீங்கள் கிரீடம் பெறுவீர்கள். அக்கிரீடம் மகிமை நிரம்பியதாகவும், ஒருபோதும் அழகு குன்றாததாகவும் இருக்கும். இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும். “அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர். ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.” எனவே தேவனுடைய வல்லமை வாய்ந்த கைகளுக்குக் கீழே தாழ்மையோடு இருங்கள். தகுந்த காலம் வரும்போது அவர் உங்களை உயர்த்துவார்.