பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3:8-16

பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3:8-16 TAERV

எனவே நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து அமைதியாக வாழவேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். ஒருவரையொருவர் சகோதரரைப்போல நேசியுங்கள். இரக்கமுள்ளவர்களாகவும், அருளுடையவர்களாகவும் இருங்கள். உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள் வேதவாக்கிம் கூறுகிறது: “வாழ்க்கையை நேசிக்கவும் நல்ல நாட்களை அனுபவிக்கவும் விரும்புகிற மனிதன் தீயவற்றைப் பேசுவதை நிறுத்தல் வேண்டும். அவன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும். அவன் அமைதியை நாடி, அதைப் பெற முயலவேண்டும். கர்த்தர் நல்ல மனிதரைக் காண்கிறார். அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்கிறார். ஆனால் தீமைசெய்யும் மனிதருக்குக் கர்த்தர் எதிரானவர்.” எப்போதும் நன்மை செய்யவே நீங்கள் முயன்றுகொண்டிருந்தால் ஒருவனும் உங்களைத் துன்புறுத்த முடியாது. ஆனால் சரியானதைச் செய்கையில் நீங்கள் துன்பம் அடைந்தால் கூட, உங்களுக்கு நல்லதே ஆகும். “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலை கொள்ளாதீர்கள்.” ஆனால் உங்கள் இதயங்களில் கர்த்தராகிய கிறிஸ்துவை பரிசுத்தம் பண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றி விளக்கிக் கூறும்படியாகக் கேட்போருக்குப் பதில் கூறுவதற்கு எப்போதும் தயாராக இருங்கள். ஆனால் அவர்களுக்கு மரியாதையோடும் மென்மையாகவும் பதில் கூறுங்கள். உங்கள் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது கிறிஸ்துவைப் பின்பற்றும் உங்கள் நடத்தையைக் குறை கூறிப் பேசுகின்ற மக்கள் வெட்கமடைவார்கள். கிறிஸ்துவில் நீங்கள் வாழும் நல்வாழ்க்கைக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் உங்களுக்கெதிராகப் பேசியவற்றிற்காக வெட்கமடைவார்கள்.