ராஜாக்களின் முதலாம் புத்தகம் 6:14-22

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 6:14-22 TAERV

இவ்வாறு சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் வேலையை முடித்தான். ஆலயத்தின் உட்புறத்தில் உள்ள கற்சுவர்கள் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. அவை தரையிலிருந்து கூரைவரை இருந்தன. கல் தரையானது தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டன. ஆலயத்தின் பின் பகுதியில் 30 அடி நீளத்தில் ஒரு அறையைக் கட்டினார்கள். அதன் சுவர்களைக் கேதுருமரப் பலகைகளால் தரையிலிருந்து கூரைவரை மூடினர். இந்த அறையானது மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. மகா பரிசுத்த இடத்தின் முன்புறத்தில்தான் ஆலயத்தின் முக்கிய இடம் இருந்தது. இந்த அறை 60 அடி நீளம் இருந்தது. அவர்கள் சுவரில் உள்ள கற்கள் தெரியாத வண்ணம் கேதுருமரப் பலகைளால் மூடினார்கள். அவர்கள் பூ மொட்டுகள் மற்றும் மலர்களின் வடிவங்களை அம்மரத்தில் செதுக்கினார்கள். சாலொமோன் ஒரு அறையை ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளே கட்டினான். இந்த அறையில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்தனர். இது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் உடையதாக இருந்தது. சாலொமோன் இந்த அறையைச் சுத்தமான தங்கத்தால் மூடினான். அவன் நறுமணப்பொருட்களை எரிக்கும் பலிபீடத்தை கட்டினான். அவன் பலிபீடத்தையும் தங்கத் தகடுகளால் மூடி பொன் சங்கிலிகளைக் குறுக்காகத் தொங்கவிட்டான். அந்த அறையில் இரண்டு கேருபீன்களின் உருவங்கள் இருந்தன. அவை தங்கத்தால் மூடப்பட்டவை. ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் தங்கத்தால் மூடப்பட்டன. மகா பரிசுத்த இடத்திற்கு வெளியே உள்ள பலிபீடத்தையும் தங்கத்தால் மூடினார்கள்.