நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 28:6-12

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 28:6-12 TAERV

கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் குமாரனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது குமாரனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன். சாலொமோன் என் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிறான். அவன் தொடர்ந்து இவ்வாறு எனது சட்டங்களுக்கு அடி பணிந்து வந்தால், அவனது அரசை என்றென்றைக்கும் பலமுள்ளதாக ஆக்குவேன்!’ என்றார்.” “இப்போது இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாகவும், தேவனுக்கு முன்பாகவும், நான் கூறுகிறேன். தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருங்கள்! அப்போது தான் இந்த நல்ல நிலம் உங்களுடையதாக இருக்கும். என்றென்றும் இதனை உங்கள் சந்ததிகளுக்கும் தர இயலும். “என் குமாரன் சாலொமோனாகிய நீ உன் தந்தையின் தேவனைப் பற்றி அறிவாய், சுத்தமான இருதயத்தோடு தேவனுக்கு சேவை செய். தேவனுக்கு சேவை செய்வதில் மனதில் மகிழ்ச்சிகொள். ஏனென்றால், கர்த்தருக்கு ஒவ்வொருவரின் மனதினுள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் கர்த்தர் புரிந்துகொள்வார். நீ உதவிக்கு கர்த்தரிடம் போனால், அவர் பதில் தருவார். ஆனால் நீ கர்த்தரிடமிருந்து விலகினால் அவர் என்றென்றைக்கும் விட்டுவிடுவார். சாலொமோன், கர்த்தர் தன் ஆலயத்தை கட்ட உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள். உறுதியாக இருந்து இதனைச் செய்துமுடி” என்றான். பிறகு அவன் தன் குமாரன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான். தாவீது ஆலயத்தின் அனைத்து பாகங்களுக்கும் திட்டம் வைத்திருந்தான். அவன் அவற்றை சாலொமோனிடம் கொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் திட்டங்களையும் கொடுத்தான். அவன் கருவூல அறைகளுக்கும் பரிசுத்தமானப் பொருட்கள் வைக்கும் அறைகளுக்கும் உரிய திட்டங்களையும் கொடுத்தான்.