நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 25:1-8

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 25:1-8 TAERV

தாவீதும், படைத்தலைவர்களும் ஆசாப்பின் குமாரர்களை சிறப்பு வேலைக்காகத் தனியாகப் பிரித்தனர். ஆசாப்பின் குமாரர்கள் ஏமான், எதுத்தூன் ஆகியோர். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை தேவனுக்கு சிறப்புப்பணியாகக் கொண்டனர். இதனைச் சுரமண்டலங்கள், தம்புருகள், கைத்தாளங்கள் போன்றவற்றால் செய்தனர். இவ்வகையில் பணி செய்தவர்களின் பெயர் பட்டியல் இது: ஆசாப்பின் குடும்பத்தில், சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா ஆகியோர். தாவீது ராஜா, ஆசாப்பைத் தீர்க்கதரிசனம் சொல்லத் தேர்ந்தெடுத்தான். ஆசாப் குமாரர்களுக்கு வழிகாட்டினான். எதுத்தானின் குடும்பத்திலிருந்து கெதலியா, சேரீ, எஷாயா, சீமேயி, அஷபியா, மத்தித்தியா எனும் ஆறுபேர். எதுத்தான் தன் குமாரர்களுக்கு வழிகாட்டினான். எதுத்தான் சுரமண்டலங்களைப் பயன்படுத்தி தீர்க்கதரிசனம் சொன்னான். கர்த்தருக்கு நன்றி சொல்லுவதும் துதிப்பதுமாக இருந்தான். ஏமானின் குமாரர்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் ஆகியோர் பணிசெய்தனர். இவர்கள் அனைவரும் ஏமானின் குமாரர்கள். ஏமான் தாவீதின் தீர்க்கதரிசி. ஏமானைப் பலப்படுத்துவதாக தேவன் வாக்களித்துள்ளார். எனவே ஏமானுக்கு அதிக குமாரர்கள். தேவன் அவனுக்கு 14 குமாரர்களையும் 3 குமாரத்திகளையும் கொடுத்தார். ஏமான் தன் குமாரர்களை ஆலயத்தில் பாடுவதற்குப் பயிற்சிகொடுத்தான். அவர்கள் சுரமண்டலங்கள், தம்புருக்கள், கைத்தாளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் தேவாலயத்தில் பணிசெய்தனர். தாவீது ராஜா அவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களும் அவர்களது உறவினர்களும் லேவியர்களின் கோத்திரத்தில் உள்ளவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களில் 288 பேர் கர்த்தரை துதித்துப் பாடக் கற்றிருந்தனர். அவர்கள் சீட்டுக் குலுக்கல் மூலம் அவர்களுக்குரிய வேலைகளை ஒதுக்கினான். எல்லோரும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். முதியவர்களும், இளைஞர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். குருக்களும், மாணவர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர்.