நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:4-18

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:4-18 TAERV

உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு சேவை செய்வதற்காக தாவீது சில லேவியர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு துதிப்பாடுவதும், அவருக்கு நன்றி சொல்வதும் வேலையாய் இருந்தது. ஆசாப், முதல் குழுவின் தலைவன். இவர்கள் கைத்தாளங்களை இசைத்தனர். சகரியா, இரண்டாவது குழுவின் தலைவன். மற்ற லேவியர்கள்: ஏயேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா. ஓபேத் ஏதோம், ஏயெல் ஆகியோர். இவர்கள் தம்புரு, சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை இசைத்தனர். பெனாயாவும் யாகாசியேலும் ஆசாரியர்கள். இவர்கள் எப்போதும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள். தாவீது கர்த்தரைத் துதித்து பாடுமாறு ஆசாப்பிடமும் அவனது சகோதரனிடமும் இவ்வேலையைக் கொடுத்தான். கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள், ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள். கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள், அவரது அதிசயங்களையும் கூறுங்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள், கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்! கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள். கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள், அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட. இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய தொண்டர்கள். யாக்கோபின் சந்ததியினர், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தர் நமது தேவன், அவரது வல்லமை எங்கும் உள்ளது. அவரது உடன்படிக்கையை எப்போதும் நினைவு கொள்ளுங்கள், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கும் அவர் கட்டளையிட்டுள்ளார். கர்த்தர் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை நினைவுகொள்ளுங்கள், அவர் ஈசாக்குக்கு செய்த வாக்குறுதியையும் கூட. கர்த்தர் யாக்கோபுக்காக சட்டத்தைச் செய்தார், இது இஸ்ரவேலோடு செய்த உடன்படிக்கை, இது என்றென்றும் தொடரும். கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: “கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன். வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்.”