சகரியா 1:7-12

சகரியா 1:7-12 TCV

தரியு அரசன் ஆட்சி செய்த இரண்டாம் வருடத்தின் சேபாத் என்னும் பதினோராம் மாதம் இருபத்து நான்காம் தேதி, இறைவாக்கினன் சகரியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. இந்த சகரியா இத்தோவின் மகனான பெரெகியாவின் மகன். நான் இரவிலே ஒரு தரிசனம் கண்டேன்; எனக்கு முன்னால் ஒரு மனிதர் சிவப்புக் குதிரைமீது சவாரி செய்துகொண்டிருந்தார். அவர் பள்ளத்தாக்கில் உள்ள நறுமண மரங்களுக்கு இடையில் நின்றார். அவருக்குப் பின் சிவப்பு நிறமும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன. அவற்றின்மேலும் சவாரி செய்வோர் இருந்தனர். அப்பொழுது நான், “ஐயா, இவைகள் என்ன?” என்று கேட்டேன். என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம், “இவைகள் என்ன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” எனப் பதிலளித்தான். அப்பொழுது நறுமண மரங்களின் இடையில் நின்றவர், “இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்து வரும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவர்கள்” என எனக்கு விளக்கினார். அவர்கள் நறுமண மரங்கள் மத்தியில் நின்ற யெகோவாவின் தூதனிடம் போய், “நாங்கள் பூமியெங்கும் சுற்றிப் பார்த்தோம். முழு உலகமும் சமாதானமாயும், அமைதியாயும் இருப்பதைக் கண்டோம்” என்றார்கள். அப்பொழுது யெகோவாவின் தூதன், “சேனைகளின் யெகோவாவே, எருசலேமின்மேலும், யூதாவின் நகரங்கள் மேலும் இன்னும் எவ்வளவு காலம் இரங்காதிருப்பீர்? எழுபது ஆண்டுகளாய் நீர் அவற்றின்மேல் கோபமாயிருந்தீரே” எனக் கேட்டான்.