உன்னதப்பாட்டு 8:6-14

உன்னதப்பாட்டு 8:6-14 TCV

என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. பெருவெள்ளமும் காதலை அணைக்காது; ஆறுகள் அதை அடித்துக்கொண்டு போகாது. காதலுக்குக் கைமாறாக, ஒருவன் தனது எல்லா செல்வங்களையும் கொடுத்தாலும், அது முற்றிலும் அவமதிக்கப்படும். எங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறாள், அவள் மார்பகங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. அவளைப் பெண்பார்க்க வரும்நாளில் நம் தங்கைக்காக நாம் என்ன செய்யலாம்? அவள் ஒரு மதில்போல கன்னிகையாயிருந்தால், அவள்மேல் வெள்ளியினால் கோபுரம் அமைப்போம். ஆனால் அவள் ஊசலாடும் கதவைப்போல ஒழுக்கமற்றவளாயிருந்தால், கேதுரு மரப்பலகைப் பதித்து அவளை மூடி மறைப்போம். நான் ஒரு மதில்போல கன்னிகைதான், என் மார்பகங்கள் கோபுரங்கள் போலிருக்கின்றன. அவர் என்னைப் பார்க்கும்போது அவருடைய கண்களுக்கு மகிழ்ச்சி தருபவளாவேன். பாகால் ஆமோனில் சாலொமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது; அவர் தனது திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரருக்குக் கொடுத்திருந்தார். ஒவ்வொருவரும் அதின் பழங்களுக்கு ஆயிரம் சேக்கல் வெள்ளிக்காசைக் கொண்டுவர வேண்டியிருந்தது. ஆனால் என் சொந்தத் திராட்சைத் தோட்டமோ, என் முன்னே இருக்கிறது; சாலொமோனே, அந்த ஆயிரம் சேக்கல் உமக்கும், அதின் பழங்களைப் பராமரிக்கிறவர்களுக்கு இருநூறு சேக்கலும் உரியதாகும். தோழிகள் சூழ, தோட்டத்தில் வசிப்பவளே, உன் குரலை நான் கேட்கட்டும். என் அன்பரே, இங்கே வாரும், நறுமணச்செடிகள் நிறைந்த மலைகளின்மேல், வெளிமானைப் போலவும் மரைக்குட்டியைப் போலவும் வாரும்.