ரூத் 2:5-11

ரூத் 2:5-11 TCV

பின் போவாஸ் அறுவடை செய்கிறவர்களைக் கண்காணிப்பவனிடம், “அந்த இளம்பெண் யாரைச் சேர்ந்தவள்?” என கேட்டான். அந்த கண்காணி போவஸிடம், “இவள் நகோமியுடன் மோவாப் நாட்டிலிருந்து வந்த மோவாபியப் பெண்; அவள் என்னிடம், ‘அறுவடை செய்கிறவர்களின் பின்னால் அரிக்கட்டுகளில் இருந்து சிந்துகிற கதிர்களைப் பொறுக்க தயவுசெய்து அனுமதியும்’ என்று கேட்டுக்கொண்டாள். காலை தொடங்கி இப்பொழுதுவரை வயலில் தொடர்ந்து வேலைசெய்தாள்; இப்பொழுதுதான் சிறிது நேரம் இளைப்பாற குடிசைக்குள் வந்தாள்” என்றான். அப்பொழுது போவாஸ் ரூத்திடம், “என் மகளே, எனக்குச் செவிகொடு. கதிர் பொறுக்குவதற்கு நீ வேறு வயலுக்குப் போகவேண்டாம். என் பணிப்பெண்களுடன் இங்கேயே இரு. மனிதர் அறுவடை செய்கிற வயலை நீ கவனித்து, பணிப்பெண்களுடனே பின்தொடர்ந்து நீயும் போ; உன்னை யாரும் தொடக்கூடாது என்று என் வேலைக்காரருக்குச் சொல்லியிருக்கிறேன். உனக்குத் தாகம் உண்டானால் என் வேலைக்காரர் நிரப்பியிருக்கும் குடங்களிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடி” என்றான். அதைக்கேட்ட அவள் பணிந்து விழுந்து வணங்கி, “நான் அந்நிய நாட்டவளாயிருந்தும் எனக்கு இவ்வளவு தயவு காட்டுகிறீர்களே!” என்று வியப்புடன் சொன்னாள். அதற்கு போவாஸ், “உன் கணவன் இறந்தபின் நீ உன் மாமியார் நகோமிக்குச் செய்ததெல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். உன் தாய் தகப்பனையும், நீ பிறந்த உன் நாட்டையும் விட்டு, முன் பின் அறியாத மக்கள் மத்தியில் வசிக்க வந்ததையும் நான் கேள்விப்பட்டேன்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரூத் 2:5-11