ரோமர் 15:21-33

ரோமர் 15:21-33 TCV

வேதவசனத்தில் எழுதியிருக்கிறபடியே: “அவரைக்குறித்து அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள், கேள்விப்படாதவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.” இதன்படியே நான் இப்படிச் செய்தேன். இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன. ஆனால் இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் நான் பணிசெய்ய வேண்டிய எந்தவொரு இடமும் இல்லை. அத்துடன் பலவருடங்களாக நான் உங்களைக் காணவும் ஆவலாயிருக்கிறேன். எனவே நான் ஸ்பெயினுக்குப் போகும்போது, உங்களிடமும் வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களையும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கின்றேன். உங்களோடு சிறிது காலத்தை மகிழ்ச்சியாய் கழித்துவிட்டு, அங்கிருந்து உங்கள் உதவியோடு, எனது பயணத்தைத் தொடருவதற்கு தீர்மானித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எருசலேமில் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு பணிசெய்வதற்காக நான் அங்கு போகின்றேன். மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள திருச்சபைகள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களிடையே ஏழைகளாய் இருக்கிறவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் அதைச் செய்ய விருப்பம் கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் அப்படிச் செய்வதற்கு அவர்கள் கடமைப்பட்டும் இருக்கிறார்கள். ஏனெனில் யூதரல்லாத மக்கள் யூதர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் பங்கு பெற்றிருப்பதினால், இவர்கள் தங்கள் உலகப் பொருட்களை யூதர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே நான் இந்தப் பணியை முடித்துக் கொண்டபின்பு, அவர்கள் இந்தப் பண உதவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியபின், ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களையும் வந்து சந்திப்பேன். நான் உங்களிடம் வரும்போது, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான ஆசீர்வாதத்துடன் வருவேன் என்பது நிச்சயம். பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது: “எனக்காக இறைவனிடத்தில் மன்றாடி, எனது போராட்டத்தில் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள். யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளிடமிருந்து நான் தப்புவிக்கப்பட வேண்டும் என்றும், எருசலேமில் நான் செய்கின்ற பணி அங்கிருக்கிற பரிசுத்தவான்களுக்கு ஏற்புடையதாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுங்கள். அப்பொழுது இறைவனுடைய திட்டத்தின்படியே நான் மகிழ்ச்சியுடன் உங்களிடம் வந்து, உங்களுடன் சேர்ந்து உற்சாகமடைவேன். சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கும் இறைவன் உங்கள் அனைவருடனும் இருப்பாராக” ஆமென்.

ரோமர் 15:21-33 க்கான வீடியோ