விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கிற நாம், பலவீனமாய் இருக்கிறவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பிரியப்படுத்தக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் நிமித்தம் விசுவாசத்தில் வளரச்செய்யும்படி, அவனைப் பிரியப்படுத்த வேண்டும். கிறிஸ்துவுங்கூட, தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என்மேலே விழுந்தன” என்று கிறிஸ்துவைப்பற்றி எழுதியிருக்கின்றன. முற்காலத்தில் எழுதப்பட்டவை எல்லாம் நம்முடைய போதனைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும், உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாய் நமக்கு எதிர்பார்ப்பு உள்ளவர்களாயிருக்கிறோம். பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக. அப்பொழுது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள். ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இது இறைவனுக்குத் துதியைக் கொண்டுவரும். நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவன் உண்மையுள்ளவர் என்பதைக் காண்பிப்பதற்காக, கிறிஸ்து யூதருக்கு ஊழியக்காரனாக வந்தார். இவ்விதம் இறைவன் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை அவர் உறுதிப்படுத்தினார். இதனால், யூதரல்லாதவர்களும் இறைவனுடைய இரக்கத்திற்காக இறைவனை மகிமைப்படுத்தும்படி இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “ஆகையால், யூதரல்லாதவர்களிடையே நான் உம்மைத் துதிப்பேன்; நான் உமது பெயருக்குத் துதிப்பாடல் பாடுவேன்.” மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே! கர்த்தருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.” மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே, நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதித்துப் பாடுங்கள்.” இன்னும் ஏசாயா, “ஈசாயின் வேர் முளைத்தெழும்பும். ஜனங்களை ஆளுகை செய்கிறவராய் அவர் எழும்புவார்; யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கை வைப்பார்கள்” என்று சொல்கிறான். எதிர்பார்ப்பைக் கொடுக்கும் இறைவன், நீங்கள் அவரில் நம்பிக்கையாயிருக்கும்போது, உங்களை எல்லாச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் எதிர்பார்ப்பில் பெருகுவீர்கள்.
வாசிக்கவும் ரோமர் 15
கேளுங்கள் ரோமர் 15
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ரோமர் 15:1-13
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்