சங்கீதம் 86:1-13

சங்கீதம் 86:1-13 TCV

யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன். நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும். நீரே என் இறைவன்; என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே, நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்; ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன். யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர். யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்; இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர். யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை; உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது. யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்; அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள். நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்; நீர் ஒருவரே இறைவன். யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்; நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 86:1-13