சங்கீதம் 63:1-11

சங்கீதம் 63:1-11 TCV

இறைவனே, நீரே என் இறைவன், நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்; தண்ணீரில்லாமல் வறண்டதும், காய்ந்ததுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என் உடலோ உமக்காக ஏங்குகிறது. பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன். உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும். நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன். அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும். என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன். நீரே என் உதவியாயிருப்பதால், உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன். நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள். அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள். ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்; பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.