சங்கீதம் 119:9-20

சங்கீதம் 119:9-20 TCV

வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே. நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும். நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன். ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன். நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன். உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன். உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, என் கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும். உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.