நீதிமொழி 6:24-35

நீதிமொழி 6:24-35 TCV

இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும், விபசாரியின் இனிய வார்த்தைகளிலிருந்தும் உன்னை விலக்கிக் காக்கும். நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே; அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே. ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்; பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள். ஒருவன் தன் உடைகள் எரியாமல் தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ? அல்லது தனது பாதங்கள் எரியாதபடி, ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ? அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்; அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான். ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது, தன் பசியைத் தீர்ப்பதற்குத் திருடுவதை மனிதர் பெரும் குறையாகக் கருதுவதில்லை. ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்; அதற்கு அவன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் அவன் கொடுக்க நேரிடும். ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்; அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது. ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்; பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான். அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான்.