நீதிமொழி 20:13-30

நீதிமொழி 20:13-30 TCV

தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய். பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள். தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல். பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள். மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும். நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள். புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு. ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும். ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது. “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார். போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல. மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும். ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான். மனிதருடைய ஆவி யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது. அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது. வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை. அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும்.